கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று படுகை, கே.ஆர்.பி அணை, பாரூர் ஏரி பாசன கால்வாயை கொண்டு சுமார் 16 லட்சம் தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக காவேரிப்பட்டினம், அரசம்பட்டி, பாரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் அரசம்பட்டி நெட்டை நாற்றுகள் குறுகிய கால சாகுபடி என்பதால் ஆந்திரா, கர்நாடக, கேரளா மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தென்னை சாகுபடியில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் கருத்தலை புழுக்கள், வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவற்றை கட்டுப்படுத்த அரசம்பட்டி பகுதியில் வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் பயிற்சியளித்தார்.
அப்போது பேசிய அவர், `மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மை கொண்டதால் மஞ்சள் நிற பாலித்தீன் பைகளில் ஆமணக்கு எண்ணையை தடவி 5 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைப்பதன் மூலம் வெள்ளை ஈக்களை அழிக்க முடியும்` எனத் தெரிவித்தார்.
மேலும் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். ஈக்கள் தாக்கப்பட்ட தென்னை மரங்களின் மீது தெளிப்பான்கள் கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலமும், ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தென்னை ஓலைகளின் அடிப்புறத்தில் தெளிப்பதன் மூலமும் வெள்ளை ஈக்கள் தாக்கத்தை கட்டுபடுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.