தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவின் ஜிடிபியில் யூடியூபர்கள் சுமார் ரூ.10,000 கோடி பங்களிப்பு!

By

Published : Dec 20, 2022, 4:11 PM IST

யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் பங்களிப்பு செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

YouTube
YouTube

டெல்லி: சமூக வலைதளங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ள யூடியூப், கடந்த சில தசாப்தங்களில் இளைய தலைமுறையினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான இளைஞர்கள் முழு நேர யூடியூபர்களாக மாறியுள்ளனர். இதனால் பல தீமைகள் இருந்தபோதும், நன்மைகள் இருப்பதையும் மறுக்க முடியாது. இளைஞர்கள் யூடியூப் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதோடு வருவாயும் ஈட்டுகின்றனர்.

இந்த நிலையில், யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யூடியூபின் ஆசிய - பசுபிக் பிராந்திய இயக்குநரான அஜய் வித்யாசாகர் கூறும்போது, "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் யூடியூப் படைப்பாளிகள் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகின்றனர். அதேபோல் நாடு முழுவதும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளையும் யூடியூப் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில், யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் பங்களிப்பு செய்துள்ளனர். முழு நேர வேலைக்கு இணையான 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை யூடியூப் வழங்கியுள்ளது" என்றார்.

மேலும், யூடியூப் தனது பார்வையாளர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக யூடியூப் இந்தியாவின் இயக்குநர் இஷான் ஜான் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "யூடியூப் பார்வையாளர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தையும், படைப்பாளர்களுக்கு லாபம் ஈட்டுவதற்கான புதிய வழியையும் கொண்டு வரும் வகையில், புதிய படிப்புகள் மற்றும் பயிற்சிகளை யூடியூப் நிறுவனம் 2023-ல் அறிமுகப்படுத்தவுள்ளது. இது பார்வையாளர்கள் கற்றுக் கொள்வதற்கும், யூடியூபர்களுக்கு வருவாய் ஈட்டும் வழிகளையும், தங்களது கனவு வேலையை அடையும் வாய்ப்புகளையும் வழங்கும்" என்றார்.

அதேபோல், நாடு முழுவதும் உள்ள பல சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது. இந்நிறுவனங்களுடன் இணைந்து நம்பகமான ஹெல்த் கன்டென்ட்களை தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. LearnoHub, Speak English With Aishwarya, Telusko போன்ற பல்வேறு தளங்கள் மூலம் இந்திய மொழிகளில் கல்வி மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை வழங்கவுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் மாணவி மீது ஆசிட் வீச்சு: ஃப்ளிப்கார்ட் பதில்

ABOUT THE AUTHOR

...view details