தமிழ்நாடு

tamil nadu

ஒடிஷாவில் பயங்கரம்: 14 வயது சிறுவன் நரபலி? - பெண் சாமியார் உள்பட 4 பேர் கைது!

By

Published : Jul 31, 2023, 2:23 PM IST

ஒடிஷாவில் பெண் சாமியாரின் மடத்திலிருந்து காணாமல் போல 14 வயது சிறுவன் வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் சாமியார் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Woman
ஒடிஷா

ஒடிஷா:ஒடிஷா மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தில் சுபர்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சித் பிஸ்வால்(14) என்ற சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் சிறுவனின் தாயார் கடந்த 22ஆம் தேதி, பாரம்பரிய வைத்தியரும், பெண் சாமியாருமான ரிதாஞ்சலி பாக்கிடம் அழைத்துச் சென்றார். ரிதாஞ்சலி நடத்தி வரும் மடத்தில் சிகிச்சை அளிப்பதாகக் கூறி, தாய் மற்றும் மகனை தனித்தனியாக அறைகளில் உறங்க வைத்து உள்ளனர். மறுநாள் காலையில் சிறுவனைக் காணவில்லை.

இதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் அவனைத் தேடி அலைந்தனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளித்த போது போலீசார் முதலில் புகாரை ஏற்கவில்லை என தெரிகிறது. அதன் பிறகு கடந்த 24ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, தாமதமாக விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி, சிறுவன் சஞ்சித்தின் உடல் பருணி வனப்பகுதியில் இருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுவன் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது போல உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். தாமதமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தனர். காவல்துறை வாகனத்திற்கும் தீ வைத்தனர். சிறுவனை கொடூரமாக கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், பெண் சாமியார் ரிதாஞ்சலியின் மடத்திற்கு சீல் வைத்தனர். பின்னர், பெண் சாமியார் ரிதாஞ்சலி மற்றும் அவரது மூன்று மகன்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சிறுவனை பெண் சாமியாரும் அவரது மகன்களும் சேர்ந்து நரபலி கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்து உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதன்சு சேகர் மிஸ்ரா கூறுகையில், "கைது செய்யப்பட்ட நால்வரும் குற்றத்தை ஓளரவுக்கு ஒப்புக்கொண்டு உள்ளனர். அடுத்தகட்டமாக அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வழக்கில் சிறுவன் நரபலி செய்யப்பட்டு உள்ளாரா? என்பது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது. பிரேத பரிசோதனை அறிக்கை, காயம் குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்த பிறகே தெரியவரும். நாங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் பலி.. மெடிக்கல் உரிமையாளர் கைது; திருச்சியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details