தமிழ்நாடு

tamil nadu

"எங்களது வீட்டில் நாங்கள் இருப்பதில், உங்களுக்கு என்ன பிரச்னை?" - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

By

Published : Dec 21, 2022, 1:03 PM IST

ஆந்திராவில் கரோனா பயத்தில் தாயும் மகளும் இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman
woman

காக்கிநாடா: இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலம் முடிவுக்கு வந்துவிட்டது. மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். இந்த சூழலில் இன்னும் சிலர் கொரோனா குறித்த உச்சகட்ட பயத்தில் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஆந்திராவில் தாயும் மகளும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பயத்தில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஆந்திராவின் காக்கிநாடா அருகே உள்ள கொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த சூரிபாபு என்பவரது மனைவியும் மகளும் 2020ஆம் ஆண்டு பெருந்தொற்று காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்பு நிலைக்கு வந்த போதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதனால் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். சூரிபாபுதான் அவர்களுக்கு உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு செல்ல சூரிபாபு அழைத்தும் அவர் மறுத்துவிட்டார். அதோடு சூரிபாபுவையும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த சூரிபாபு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் இருவரும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. "எங்களது வீட்டில் நாங்கள் இருப்பதில், உங்களுக்கு என்ன பிரச்னை?" என்று கேட்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சுகாதாரத்துறையினர் காக்கிநாடா அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சூரிபாபு கூறும்போது, "எனது மனைவியும் மகளும் கொரோனாவுக்கும் சூனியத்திற்கு பயப்படுகிறார்கள். இதனால் பகல் நேரங்களில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை நிறுத்திவிட்டனர். நான் பலமுறை உறுதியளித்த போதும், அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பகலில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க இரவில் வெளியே வருவார்கள். கடந்த சில நாட்களாக அவர்கள் என்னையும் வெளியே செல்லவிடவில்லை. அதனால் சுகாதாரத்துறையினரை அழைத்தேன்" என்றார்.

இதையும் படிங்க: தமிழர்களிடம் நூதன முறையில் ரூ.2.67 கோடி அபேஸ்.. டெல்லியில் ரயில்களை எண்ணிய அவலம்!

ABOUT THE AUTHOR

...view details