தமிழ்நாடு

tamil nadu

உலக சுகாதார அமைப்பின் அவசரகால மருந்துகள் பட்டியலில் கோவாக்சின்? அடுத்த வாரம் முடிவு!

By

Published : Oct 18, 2021, 3:02 PM IST

கோவாக்சின்
கோவாக்சின்

கோவாக்சின் அவசரகாலப் பயன்பாடு குறித்து பரிசீலிக்க உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வரும் அக்டோபர் 26ஆம் தேடி கூட உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அவசர கால பயன்பாடாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இதுவரை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை.

முன்னதாக, கோவாக்சின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம், WHO இணையதளத்தில் மருந்து குறித்த முழு தகவல்களையும் பதிவேற்றியுள்ளதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அதனை ஆய்வு செய்து வருவதாக சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து தற்போது ட்வீட் செய்துள்ள சௌமியா சுவாமிநாதன், ”உலக சுகாதார அமைப்பு, ஆவணங்கள் குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் நெருங்கிப் பணியாற்றி வருகிறது. அவசரகாலப் பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பரந்துபட்ட தகவல்களைக் கொண்டிருப்பதும், அவற்றை அனைத்து மக்களும் அணுகும் விதத்தில் கொண்டு சேர்ப்பதுமே எங்களது குறிக்கோள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவசரகாலப் பயன்பாட்டுக்கான உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை செப்டம்பர் மாதத்திற்குள் பெற்றுவிடுவோம் எனப் பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்தது. மேலும், இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள், பாரத் பயோடெக் நிறுவனம் இடையேயான கூட்டம் ஒன்று ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது.

கோவாக்சின் தடுப்பூசி, கரோனா தொற்றுக்கு எதிராக 77.8 விழுக்காடு பலன் தரும் என்றும், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 விழுக்காடு பலன் தரும் எனவும் முந்தைய மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

ABOUT THE AUTHOR

...view details