தமிழ்நாடு

tamil nadu

WB Panchayat Polls: வன்முறைகளுக்கு மத்தியில் மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

By

Published : Jul 8, 2023, 10:27 AM IST

Updated : Jul 8, 2023, 11:26 AM IST

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே உள்ளாட்சி நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான மோதலைக் காண வாய்ப்பு உள்ள நிலையில், அங்கு பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது.

West Bengal Panchayat polls: Amid violence, polling begins for 73,000 seats; 2 lakh candidates in fray
மேற்குவங்க மாநில பஞ்சாயத்து தேர்தல் - வன்முறைக்கு மத்தியில், 73,000 இடங்களுக்கு வாக்குப்பதிவு துவக்கம்!

கொல்கத்தா :மேற்கு வங்க மாநிலத்தில், பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜுலை) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலத்தில் உள்ள மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் உள்ள 73,887 இடங்களுக்கான உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்காக நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 2.06 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சுமார் 5.67 கோடி மக்கள், இந்த தேர்தலில் வாக்கு அளிக்க தகுதி பெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள், தங்கள் கட்சியின் பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்து உள்ளதால், திரிணாமுல் காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியான ஆட்சியின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தின் மனநிலையை விரிவாக கோடிட்டுக் காட்டுவதாக அமைந்து உள்ளது.

பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 22 மாவட்டங்களில் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களும், 9,730 பஞ்சாயத்து சமிதி இடங்களுக்கும், டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் என 20 மாவட்டங்களில் உள்ள 928 ஜில்லா பரிஷத் இடங்கள் மற்றும் கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகம் (GTA) மற்றும் சிலிகுரி துணைப் பிரிவு கவுன்சில் உள்ளிட்ட இடங்களுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

இடைவிடாத மழைக்கு மத்தியில், காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 747 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 6,752 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், 35,411 கிராம பஞ்சாயத்து இடங்களிலும் போட்டியிடுகின்றது. காங்கிரஸ் கட்சி 644 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 2,197 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், 11,774 கிராம பஞ்சாயத்து இடங்களிலும் போட்டியிடுகின்றது. சுமார் 70,000 மாநில போலீஸாருடன் குறைந்தபட்சம் 600 கம்பெனி மத்தியப் படைகள் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும், இதை வலியுறுத்தும் வகையில், வாக்குப்பதிவின் போது தனது அணியுடன் மக்களை சந்திக்க உள்ளதாக, மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 7ஆம் தேதி) தெரிவித்து உள்ளார்.

இந்த தேர்தலை ஒட்டி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம், மாநில அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி முயற்சிகள் மற்றும் மத்திய அரசால் நிறுத்தப்பட்ட MGNREGA நிதியைச் சுற்றியே அமைந்து இருந்தது. ஆளுங்கட்சியின் பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.

பஞ்சாயத்து மட்டத்தில் இருந்து மாநில அளவில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வரை ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் வன்முறைகளில் கவனம் உள்ளிட்டவைகளே, பாஜக, சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோஷமாக இருந்தது. பாஜக எம்எல்ஏவும், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான அசோக் லாஹிரி, பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்று வன்முறை அச்சம் இருப்பதாகக் கூறி, தக்ஷின் தினாஜ்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், இரவோடு இரவாக வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்குச் சீட்டுகளை பறித்ததோடு அல்லாது, பாஜக வேட்பாளர்களையும் அச்சுறுத்தியதாக அசோக் லாஹிரி குற்றம் சாட்டி உள்ளார். புர்பா மெதினிபூர் மாவட்டத்தின் இடாபேரியா பகுதியில் பாஜக தொண்டர்கள் வாக்காளர்களை அச்சுறுத்துவதாகவும், நந்திகிராம் 2 தொகுதியில் உள்ள பிருலியா கிராமத்தில் தனது வேட்பாளர் பாஜகவால் கடத்தப்பட்டு உள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதேபோல், நாடியா மாவட்டத்தின் ஹன்ஸ்காலி பகுதியில் பாஜக ஆதரவாளர்கள், தங்களது கட்சி தொண்டரை அடித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில், வன்முறை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 34 சதவீத இடங்களைப் போட்டியின்றி கைப்பற்றி, மீதமுள்ள 90 சதவீத இடங்களை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தவ் தாக்கரே தரப்பின் முக்கிய பிரமுகர் ஆளும் கட்சியில் இணைந்தார்!

Last Updated : Jul 8, 2023, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details