தமிழ்நாடு

tamil nadu

Track restoration: ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

By

Published : Jun 4, 2023, 8:22 AM IST

Track restoration: ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஒடிசாவில் 3 ரயில்கள் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்கள் மற்றும் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பாலசோர்: கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்றைய முன்தினம் (ஜூன் 2) பயங்கர விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில நிர்வாகம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நேற்று (ஜூன் 3) பிற்பகலில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான ரயில்கள் மற்றும் ரயில்வே வழித்தடத்தை சீர் செய்யும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று நள்ளிரவிலும் நடைபெற்ற சீரமைப்பு பணிகள், இன்று (ஜூன் 4) காலையிலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று விபத்து நடைபெற்ற ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நடைபெற்ற சம்பவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை என்றும், இந்த விபத்து மனிதத் தவறால் நடைபெற்றதா அல்லது தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்ததா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

அதேநேரம், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த சீரமைப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஓய்வின்றி இயங்கி வருவதாகவும் இந்திய ரயில்வே துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த சீர் செய்யும் பணியில் 7க்கும் மேற்பட்ட பொக்லைன்கள், 2 நிவாரண ரயில்கள் மற்றும் ராட்சச அளவிலான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்த ஆயிரத்து 175 பயணிகள் பாலசோர் சுற்று வட்டார மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான கோரமண்டல் மற்றும் ஹவுரா ரயில்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில், சிறு காயங்கள் உடன் சிகிச்சை பெற்று வந்த 790க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மிகப்பெரிய விபத்து நடைபெற்றுள்ள இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும், சீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டிய நேரத்தில், இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Odisha Train Accident: விபத்திற்கு நிர்வாகம் காரணமா? தனி மனிதர் காரணமா? ஆ.ராசா கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details