தமிழ்நாடு

tamil nadu

உறங்க வந்த இளைஞர் மீது விளையாட்டாக தீ வைத்தவர்கள் கைது!

By

Published : Jul 27, 2021, 9:43 PM IST

புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் பெட்ரோல் பங்கில் இரவு உறங்க வந்த இளைஞரை மிரட்டுவதற்கு, விளையாட்டாக பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்த உரிமையாளர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமெளரியா. இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இவரது பெட்ரோல் பங்கிற்கு நேற்று முன்தினம் (ஜூலை.25) இரவு அடையாளம் தெரியாத நபர் வந்து உள்ளார். இதையடுத்து பங்க் ஊழியர்கள் நோட்டமிட்ட நபரை திருடன் என நினைத்து அழைத்துள்ளனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறவே பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உரிமையாளர் ராஜமெளரியா, அவரது தம்பி ராஜ வரதன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

'தான் திருடன் இல்லை'

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும்; இரவு உறங்க இடம் தேடி வந்ததாகவும், தான் திருட வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பாமல் அவரிடம் உண்மையை அறிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள், பெட்ரோலை ஊற்றி அந்த இளைஞரிடம் விளையாட்டாக தீக்குச்சியைப் பற்ற வைத்து மிரட்டினர்.

இதில் அந்த இளைஞரின் வயிற்றுப் பகுதில் தீப்பிடித்தது. உடனே பதற்றம் அடைந்த ஊழியர்கள் தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை அணைத்தனர். தீக்காயங்களுடன் இளைஞர் கதறியபடி அருகில் உள்ள கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இவர் திருச்சி கிழக்கு தெருவைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பதும், புதுச்சேரிக்கு அவர் வேலை தேடி வந்ததாகவும், இரவு படுப்பதற்கு பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது இச்சம்பவம் நடந்ததாகவும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது புகாரை பெற்ற காவல் துறை, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ராஜமெளரியா மற்றும் அவரது தம்பி ராஜவரதன், ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details