தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் மீது நடவடிக்கை: குடியரசுத் தலைவரிடம் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை மனு!

By

Published : Jan 12, 2023, 5:48 PM IST

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, சட்டத்துறை அமைசர் ரகுபதி உள்ளிட்டோர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

குடியரசுத் தலைவரிடம் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை மனு.
குடியரசுத் தலைவரிடம் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை மனு.

டெல்லி:தமிழ்நாட்டில் ஆளுநருக்கு, ஆளும் கட்சிக்குமான உறவு என்பது எப்போது, ஏட்டிக்குப் போட்டியாக இருப்பதாக கருதப்படுகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் காலம் வரை, ஆளுநருடன் சுமூக உறவின் மூலம் ஆட்சி நடந்ததே அரிதாக காணப்படுகிறது.

அந்த வகையில் தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுகவிற்குமான உறவில் தொடர் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் நீட் தேர்வு விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான கட்டுரைகளும், செய்திகளும் முரசொலியில் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், 'தமிழ்நாடு' என்பதற்குப் பதிலாக 'தமிழகம்' எனச் சொல்வது சரியாக இருக்கும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநருக்கு எதிராக கண்டனக் கணைகளை தொடுத்தனர்.

இந்நிலையில், பற்றி எரியும் நெருப்பில், எண்ணையை ஊற்றியது போல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், தமிழ்நாடு, திராவிட மாடல், மதநல்லிணக்கம், சமத்துவம், சமூகநீதி, பல்லுயிர் ஓம்புதல், பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளையும் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் இருந்த பகுதியை அவர் படிக்காமல் தவிர்த்து விட்டதாகவும் கூறி அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்ததைக் கண்டித்து அவைக் குறிப்பில் ஆளுநரின் மொத்த குறிப்புகளையும் நீக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் தீர்மானத்தை வாசித்தார். ஆளுநர் படித்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும்; அவர் முழுமையாக படிக்காதது வருத்தமளிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக்கொண்டு இருந்த நிலையில் ஆளுநர் சட்டென அவையை புறக்கணித்து வெளியேறினார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறி பேரவை மரபை மீறிவிட்டதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகைக்கு விரைந்தனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து திமுக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்பைத் தொடர்ந்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து சில வார்த்தைகளை அவரே சேர்த்தது மரபுகளை மீறியச் செயல். தேசிய கீதம் பாடும் முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறியது தமிழ்நாடு சட்ட சபையை மற்றும் மக்களை அவமதிக்கும் செயல். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த மனுவை படித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த மனு சீலிடப்பட்டு இருந்ததால், அதில் என்ன கோரிக்கைகள் இருந்தது எனத் தெரியாது என்றும்; ஆனால், ஆளுநர் விவகாரம் என்பது மட்டுமே தெரியும் என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

இதையும் படிங்க:விமான நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: மிஸ் பண்ணிடாதீங்க!

ABOUT THE AUTHOR

...view details