தமிழ்நாடு

tamil nadu

Farm laws: அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மாநில முதலமைச்சர்கள் வரவேற்பு

By

Published : Nov 19, 2021, 7:29 PM IST

வேளாண் திருத்தச் சட்டங்களை (Farm laws) திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளனர்.

state chief ministers tweet about repeal of farm laws
state chief ministers tweet about repeal of farm laws

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்காக காணொலியில் தோன்றி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், 'ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து மாநில முதலமைச்சர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க, பஞ்சாப் முதலமைச்சர்கள் வரவேற்பு

இதுகுறித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், ''பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்'' எனக் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, 'ஒன்றிய அரசின் அறிவிப்பு வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர், "பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடங்கிவைத்த நீண்ட, அமைதியான போராட்டத்தின் பலனாக வேளாண் திருத்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எனது வணக்கங்கள்," எனத் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு வெளியாகியும் தொடரும் போராட்டம்

நாடாளுமன்றத்தில் வேளாண் திருத்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details