தமிழ்நாடு

tamil nadu

எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் அங்கீகாரம்? - இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலனை!

By

Published : Apr 19, 2023, 9:27 AM IST

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனை செய்யவுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக இன்று(ஏப்.19) இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தலைமையில் பரிசீலனை செய்யவுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, உட்கட்சி அமைப்பு தேர்தல் மூலம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. மேலும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கானது நாளை(ஏப்.20) விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி(EPS) தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவிற்கு பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம், "இன்னும் 10 நாட்களில் இது குறித்து முடிவெடுக்கப்படும்" என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

EPS: அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் - எடப்பாடி பழனிசாமி

கடந்த ஏப்.12ஆம் தேதி தேர்தல் ஆணையம் கூறிய நிலையில் ஏப்.22ஆம் தேதியோடு ஆணையம் கூறிய காலக்கெடு முடிவடைகிறது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது எனவும் தற்போது வரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும் என்னுடைய தரப்பு வாதத்தையும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேற்றைய(ஏப்.18) தினம் மனு அளித்திருந்தார். இது குறித்தும் இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய உள்ளது.

கடந்த காலங்களில் இது போன்ற உட்கட்சி விவகாரங்களில் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. சாதிக் அலி வழக்கு மற்றும் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் வழக்குகளில் பெரும்பான்மையை மையமாக வைத்து கட்சியும், சின்னமும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மகாராட்டிராவில் சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் அதிக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளின் அடிப்படையில் கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு வழங்கப்பட்டது. பெரும்பான்மை அடிப்படையில் உத்தரவு வழங்கினால் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: TNPSC: குரூப்-1, குரூப்-2 மெயின்ஸ் தேர்வு முடிவு எப்போது? - டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details