தமிழ்நாடு

tamil nadu

"மணிப்பூர் கலவரத்தில் சீனாவின் குறுக்கீடு உள்ளது.." சஞ்சய் ராவத் திடுக் தகவல்

By

Published : Jul 2, 2023, 8:36 PM IST

மணிப்பூர் கலவரத்தில் சீனாவின் தலையீடு உள்ளதாகவும், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றும் சிவசேன உத்தவ் தாக்ரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

Sanjay Raut
Sanjay Raut

மும்பை :மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் சீனாவின் குறுக்கீடு இருப்பதாக சிவசேனா உத்தவ் தாக்ரே அணியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த மே 3ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மலைப் பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கும், தலைநகர் இம்பாலை சுற்றி உள்ள மைதேயி இன மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.

பொருளாதாரத்தில் முன்னேறிய மைதேயி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என் நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை வெடித்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அமைதியை நிலை நாட்ட முடியாமல் மாநில மற்றும் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்த கலவரத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ராணுவத்தினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இருப்பினும் மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. மேலும் மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மையில் கலவரம் பாதித்த மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு நாட்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்று வந்தார். சுரந்த்பூர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொது சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்தின் பின்னணியில் சீனாவில் குறுக்கீடு இருப்பதாக அதிர்ச்சி தகவலை சிவசேனா உத்தவ் தாக்ரே அணியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மணிப்பூரில் இனக் கலவரத்தில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயல்வதாகவும் கூறினார்.

மேலும் மணிப்பூரில் வன்முறையைத் தூண்டுவதில் சீனா திட்டமிட்டு உள்ளது என்றும், சீனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார். மத்தியிலும், வடகிழக்கு மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளது என்றும் மே 3 முதல் இனக்கலவரம் நடந்து வரும் நிலையில் வன்முறையை முன்கூட்டியே திட்டமிட்டது யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க :ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு... மத்திய ஆசியாவில் இந்தியாவின் திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details