தமிழ்நாடு

tamil nadu

மக்களவையில் புகைக்குண்டு வீச்சு..! குதித்தோடிய பார்வையாளர்களால் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 1:15 PM IST

Updated : Dec 13, 2023, 5:30 PM IST

parliament security breach: நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில், மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து அவைக்குள் நுழைந்து புகைக்குண்டுகளை வீசிய இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Security breach in Lok Sabha
மக்களவையில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு

மக்களவையில் புகைக்குண்டு வீசிய நபர்களால் பரபரப்பு

டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில், மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து விதிகளை மீறி குதித்தோடிய பார்வையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் குளிர்கால கூட்டத் தொடரில் பூஜ்ஜிய நேரத்தின் போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து திடீரென இரண்டு இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்தனர்.

இதனால் சுதாரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றினர். இளைஞர்களில் ஒருவர் சபாநாயகரை நோக்கி ஓட முயன்றார். ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் ஏறி நின்று கூச்சலிட்டார். அப்போது அவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளைஞர்களைப் பிடித்தனர். பின்னர் பாதுகாவலர்கள் இளைஞர்களைப் பிடித்து வெளியேற்றினர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் என்ன திட்டத்துடன் உள்ளே நுழைந்தார்கள், அவர்களுக்கு பாஸ் வழங்கியது யார் என விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஒருவர் டி தேவராஜு கவுடாவின் மகன் மனோரஞ்சன் எனவும், மற்றொருவர் சங்கர் லால் சர்மாவின் மகன் சாகர் சர்மா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களிடம் இருந்த பாஸ்-யை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன், “பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் குதித்தனர். அவர்கள் எதோ வாயுவை வெளியேற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைப் பிடித்தனர். பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவர்களைப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பு விதிமீறலாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அவைக்குள் குதித்தனர். அவர்கள் கையில் குப்பிகளை வைத்திருந்தனர். அந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகையுடன் வாயு வெளியேறியது.

இந்த இளைஞர்களில் ஒருவர் சபாநாயகரை நோக்கி ஓடுவதற்கு முயன்றார். அது எத்தகைய வாயு எனத் தெரியவில்லை. அது விஷ வாயுவாகக் கூட இருக்கலாம். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட அதே தினத்தில் இத்தகைய நிகழ்வு நடந்திருப்பது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் மஞ்சள் வண்ண புகைகளை வெளியேற்றியபடி கோஷங்களை எழுப்பிய ஒரு இளைஞர், ஒரு பெண் என இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த நீலம் (45), மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே (25) எனத் தெரியவந்துள்ளது. போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னை கொலை செய்வதற்கு முயன்றதற்குப் பதிலடியாக டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கப் போவதாக காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் (Gurpatwant Singh Pannun) மிரட்டல் விடுத்திருந்த நிலையில் இன்று பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவை மீண்டும் துவங்கப்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், “பூஜ்ஜிய நேரத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அது வெறும் புகை எனத் தெரியவந்துள்ளது. வெறும் புகை தான் என்பதால் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டிசம்பர் 13 2001-இல் நடந்தது என்ன? - முழு விவரம்!

Last Updated : Dec 13, 2023, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details