தமிழ்நாடு

tamil nadu

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு: விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Feb 23, 2021, 1:09 PM IST

Updated : Feb 23, 2021, 1:31 PM IST

ராதாபுரம் mla

டெல்லி: ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளும், திமுக வேட்பாளர் அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனையடுத்து, 49 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தேர்தல் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்ட 203 அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு அக். 03 ஆம் தேதி உத்தரவிட்டது.

ராதாபுரம் தொகுதி தேர்தலில் எண்ணப்பட்ட 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகளையும், ஆயிரத்து 508 அஞ்சல் வாக்குகளையும் மறுவாக்கு எண்ணிக்கை நடந்த உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் அப்பாவு அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு முன், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அப்பாவு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "கடந்த 2019ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 203 தபால் வாக்குகளை எண்ண வேண்டும். இன்பதுரையை விட அப்பாவு 98 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் ஆதரவே இல்லாமல் எம்எல்ஏவாக பொறுப்பு வகிக்கிறார். அடுத்த தேர்தலுக்கு மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில், மக்களின் ஆதரவு பெற்ற அப்பாவுவை வெற்றியாளராக உச்ச நீதிமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும்" என வாதாடினார்.

இதனையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Last Updated :Feb 23, 2021, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details