பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் வீடுகள் சேதமடந்து உள்ளன. பலரது வீடுகளில் மேல் கூரையே இல்லை. அவர்களுக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் உதவி வருகின்றன. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த போர் வீரர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மூலை முடுக்குகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குகிறார்கள். சட்லஜ் நதியின் (Sutlej River) நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சில பகுதிகளில் நிலைமை மோசமாகி வருகிறது.
ஜலாலாபாத் பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த 250 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள முள்வேலியும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தனது 10 வாயில்களில் 6 கதவுகளைத் திறந்துள்ளது. மறுபுறம், பாட்டியாலாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், நகரின் 15க்கும் மேற்பட்ட காலனிகளிலும் கடந்த 4 நாட்களாக வெள்ளப்பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இருந்து மக்கள் சிறிது நிவாரணம் பெற்றுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சங்ரூர் கானுரி மற்றும் முனாக் பகுதி வழியாக செல்லும் காகர் நதியின் (Ghaggar River) நீர் மட்டம் அபாயக் குறியான 750 அடியை விட 1.3 அடி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மீட்புப் பணியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த மீட்பு நடவடிக்கையின் போது, சற்றும் மனம் தளராமல் பஞ்சாப் இளைஞர்கள் இந்தப் பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றுவது தங்கள் கடமை என்று கருதி NDRF, SDRF, Army, BSF அவர்களுடன் இணைந்து மீட்புப் பணியாற்ற முன்வந்துள்ளனர்.