தமிழ்நாடு

tamil nadu

பஞ்சாப்பில் நாளை வரை இணைய சேவை முடக்கம்

By

Published : Mar 19, 2023, 7:50 PM IST

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் தொடர்ந்து தலைமறைவாகி உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 20) வரை, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இணையதள சேவை முடக்கம்
இணையதள சேவை முடக்கம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் "வாரீஸ் பஞ்சாப் டீ" என்ற அமைப்பை முன்னெடுத்து, காலிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர் அம்ரித்பால் சிங். இவரது உதவியாளர் லவ்ப்ரீத் கடந்த மாதம், கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆதரவாளர்களை திரட்டிய அம்ரித்பால் சிங், அஜ்னாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.

வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். காவல்நிலையத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்தனர். இதில் போலீசார் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட லவ்ப்ரீத்தை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, லவ்ப்ரீத்தை போலீசார் விடுவித்தனர்.

எனினும், அம்ரித்பாலை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். நேற்று (மார்ச் 18) பாதுகாப்பு வாகனங்களுடன் சென்ற போது அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரங்களை சிலர் பரப்ப வாய்ப்புள்ளதால், நேற்று மாநிலம் முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை (மார்ச் 20) பிற்பகல் வரை இணைய சேவை துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், படாலா போலீசார், அப்பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். வீடு வீடாக சென்ற போலீசார், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அம்ரித்பால் தரப்பிடம் இருந்து 3 கார்கள், 7 சட்டவிரோத துப்பாக்கிகள், 300 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாகியுள்ள அம்ரித்பாலை தொடர்ந்து தேடி வருகிறோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றனர். இதற்கிடையே பத்தின்டா பகுதியில் காலிஸ்தான் தனி நாட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் பெண்ணை தாக்கி காரில் ஏற்றிய கொடூரம் - என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details