தமிழ்நாடு

tamil nadu

கேஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் வரவேற்பு.. புதுச்சேரியில் எவ்வளவு விலை குறையும்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 6:56 PM IST

Puducherry gas price: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Rs200 reduction in the price of cooking gas
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சமையல் எரிவாயுவின் விலை ரூ.200/- குறைக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் 'பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்' அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே 9.1 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஏழைப் பெண்களுக்குக் கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மத்திய அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 30) முதல் கூடுதலாக 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும். ஓணம் மற்றும் ரக்க்ஷா பந்தன் தினத்தில் மகளிருக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக இந்த விலைக் குறைப்பு உள்ளது என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரையில் மாநில அரசின் சார்பில் ஏற்கனவே சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.300, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.150, சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது. புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன் புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாகப் பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1,115-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 500 ரூபாய் குறைந்து ஒரு சிலிண்டர் 615 ரூபாய்க்கும், மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஒரு சிலிண்டருக்கு 350 ரூபாய் விலை குறைந்து ஒரு சிலிண்டர் 715 ரூபாய்க்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"ஒரு கிளிக்கில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000"- ராகுல் காந்தி பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details