தமிழ்நாடு

tamil nadu

Train accident update: ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

By

Published : Jun 4, 2023, 2:14 PM IST

Odisha cm

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தங்கள் மாநிலத்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என, முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

புவனேஸ்வர் (ஒடிசா):மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பஹங்கா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அப்போது, எதிரே யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற விரைவு ரயில், தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 1,100 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதேபோல் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசா மாநிலத்தவர்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். பலியானோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் நவீன் பட்நாயக், காயம் அடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தால் பாலேஸ்வர் தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கொல்கத்தாவுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுவதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "புரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய பகுதிகளில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவசமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இதற்கான செலவுத் தொகை வழங்கப்படும். பாலேஸ்வர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும் வரை, அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்து தரப்படும்" என கூறியுள்ளார்.

இந்த ரயில் விபத்து நாட்டையை உலுக்கியுள்ள நிலையில், விபத்து நடந்த இடத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரயில் விபத்தில் சிக்கி கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முடுக்கிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Track restoration: ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details