தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; 8 பாதுகாப்புப் பணியாளர்களை சஸ்பெண்ட்!

By ANI

Published : Dec 14, 2023, 2:19 PM IST

Parliament Security Breach: நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து இன்று புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சம்பவத்தின்போது இருந்த 8 பாதுகாப்புப் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

8 பாதுகாப்புப் பணியாளர்களை சஸ்பெண்ட்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்

டெல்லி:நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் நினைவு நாளன்றே, மீண்டும் அதுபோன்ற ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் நேற்று நடந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதன் பத்தாவது நாளான நேற்று, பார்வையாளர் மாடத்தில் இருந்து இருவர் திடீரென உள்ளே குதித்து, உறுப்பினர்களின் மேசைகள் மீது தாவி ஓடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த குப்பிகளில் இருந்த மஞ்சள் நிற புகையை வெளியேற்றியபடி கோஷங்களை எழுப்பினர். இதனை எதிர்பாராத உறுப்பினர்கள் சிலர், அவர்களை ஓடிச் சென்று பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் நடக்க, நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு பெண் உள்பட இருவர் அதே போல குப்பிகளில் இருந்த நிறங்கள் அடங்கிய புகையை வெளியேற்றி, கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களையும் காவல் துறையினர் பிடித்தனர்.

இந்நிலையில், 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் நினைவு நாளன்றே, மீண்டும் இது போன்ற ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் நடந்ததை கண்டித்து, மக்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பியதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “நேற்று சபையில் நடந்தது பற்றி நாம் அனைவரும் அக்கறை கொண்டுள்ளோம். சபையின் பாதுகாப்பானது மக்களவை செயலகத்தின் பொறுப்பாகும்” என கூறினார். மேலும் இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “இது உளவுத்துறையின் தோல்வி, இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு பதிலளிக்க வேண்டும்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம்!

டெல்லி காவல்துறை மற்றும் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த சம்பவம் குறித்து அவர் பதிலளிக்க வேண்டும். இந்த பொறுப்பில் இருந்து அவர் தப்ப முடியாது. பாஜக எம்பி சிம்ஹா இந்த குற்றவாளிகளுக்கு பாஸ்களை வழங்கியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பின்னால் பெரிய சதி உள்ளது, அவரை தண்டிக்காமல் விடக்கூடாது” என கூறியுள்ளார்.

பாதுகாப்பு மாற்றங்கள்:இந்த பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக 8 பாதுகாப்புப் பணியாளர்களை மக்களவைச் செயலகம் இன்று இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மாற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக நாடாளுமன்றத்திற்கு உள்ளே நுழைபவர்கள் ஆயுதம் அல்லது பிற ஆபத்தான கடத்தல் பொருட்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் தற்போது அந்த தீவிர சோதனையையும் தாண்டி, வெளி வளாகத்தில் உள்ள நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, காலணிகளைக்கூட கழற்றுமாறு வலியுறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த புதிய பாதுகாப்பு அமைப்பானது, விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனை போல நடத்தப்படுகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழையும் ஆறு நுழைவு வாயில்களில் ஒன்றான புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் 'மகர் துவாரில்' இருந்து, கிட்டத்தட்ட 50-60 மீட்டர் தொலைவில் ஊடகங்கள் நிற்க பாதுகாப்புப் பணியாளர்கள் தடை விதித்துள்ளனர்.

மகர் துவாரில் இருந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் எம்பிக்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டடத்திற்குள் நுழையும் அனைத்து நபர்களும் முழுமையான சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. முதலமைச்சருடன் மத்திய குழு இன்று ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details