டெல்லி:உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி எனக் குறிப்பிடப்படும் இடம், ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த ராமர் கோயில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில், வருகிற ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் என பல தரப்பினருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஜனவரி 16ஆம் தேதி ஹோமங்கள் துவங்கப்பட உள்ளன.
இந்த ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமரின் சிலை சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக, 3 புகழ்பெற்ற சிற்பிகளிடம் சிலையினை செதுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அயோத்தியில் 6 மாதங்களாக முகாமிட்டிருந்த 3 சிற்பிகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடாரத்தில் இருந்து குழந்தை ராமரின் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள ராமர் சிலை குறித்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அவரது X வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ராமன் எங்கோ அனுமனும் அங்கே. அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமரின் சிலை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
பெருமைக்குரிய சிற்பி யோகிராஜ் அருண் வடித்த ராமர் சிலை அயோத்தியில் நிறுவப்படும். ராம அனுமனின் பிரிக்க முடியாத உறவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமருக்கு செய்யப்பட்டிருக்கும் சிறப்பான சேவை” எனப் பதிவிட்டுள்ளார்.