குவாலியர் :ஐஆர்சிடிசி உணவகத்தில் வெஜ் பாஸ்தா ஆர்டர் செய்த தம்பதிக்கு சிக்கன் போட்டு கொடுத்த சம்பவத்தில் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி லட்சுமி பாய் ரயில் நிலையத்தில் இருந்து, டெல்லி ஹசரட் நிஜாமுதின் ரயில் நிலையம் நோக்கி சென்ற கதிமான் விரைவு ரயிலில் ஆர்.கே. திவாரி, பிரித்தி தம்பதி பயணம் செய்து உள்ளனர். ஐஆர்டிசி மூலம் உணவகத்தில் சோலே எனப்படும் கொண்டக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் சைவ உணவை தம்பதி ஆர்டர் செய்து உள்ளனர்.
ஜான்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த தம்பதிக்கு ரயில்வே ஊழியர் ஒருவர் உணவு டெலிவிரி செய்து உள்ளார். உணவு பிரித்து பார்த்த தம்பதிக்கு அதிர்ச்சியாக அதில் சிக்கன் துண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த தம்பதி, உணவை வீடியோவாக எடுத்து தங்களது மகளுக்கு அனுப்பி உள்ளனர்.
அவர், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மட்டும் ஐஆர்சிடிசிக்கு ஆன்லைன் மூலம் புகார் கொடுத்து உள்ளார். இந்த சம்பவம் பூதாகரம் ஆன நிலையில், சைவ உணவு ஆர்டர் செய்த தம்பதிக்கு அசைவ உணவு டெலிவிரி செய்ததாக ஐஆர்சிடிசி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், ஐஆர்சிடிசி மூலம் உணவு வழங்கும் உணவகத்தால் இந்த குளறுபடி நடந்ததாகவும், அவர்களிடம் இருந்து உணவு பொட்டலங்களை பெற்று டெலிவிரி மட்டும் செய்து வருவதாகவும், குளறுபடியில் ஈடுபட்ட உணவு சப்ளை செய்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதேபோல், குவாலியரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ரயிலில் பயணம் செய்த கிருத்திகா மோடி என்பவர் பாஸ்தா மற்றும் சோலே - குல்ச்சே என்ற சைவ உணவு ஆர்டர் செய்த உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட போது அதில் சிக்கன் கலந்து இருப்பது தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ரயில்வே ஊழியரிடம் புகார் அளித்து உள்ளார். இது குறித்து ரயில்வே கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, அவர் தவறை ஒப்புக்கொண்டதாகவும், கேட்டரிங் நிறுவனத்தின் தவறால் இது நடந்ததாக கூறியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து விசாரித்து வருவதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்து உள்ள நிலையில், மற்ற ரயில் பயணிகளிடையே முக சுழிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :"இந்தியாவை பற்றி ஒபாமாவுக்கு என்ன தெரியும்..." மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் தாக்கு!