தமிழ்நாடு

tamil nadu

முடியும் தருவாயில் 5ஜி... வேகமெடுக்கும் 6ஜி - மத்திய அமைச்சர் தகவல்

By

Published : Feb 9, 2022, 4:05 PM IST

Updated : Feb 9, 2022, 5:27 PM IST

இந்தியாவில் 5ஜி-யை மேம்படுத்தும் பணி இறுதி நிலையை எட்டியுள்ளது. அதேசமயம் 6ஜி-யை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

5ஜி
5ஜி

டெல்லி: ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு நெட்வொர்க்கான 5ஜி பணி நிறைவடையும் தருவாயில், 6ஜி பணி நடைபெறுவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற்ற இந்தியா தொலைத்தொடர்பு 2022 பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியில் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "நாடு அதன் சொந்த 4ஜி மையம் (Core), ரேடியோ நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. மேலும் 6ஜி நெட்வொர்க்கிற்கான பணி நடைபெற்றுவருகிறது" என்றார்.

உலக நாடுகளுக்கு உகந்த வகையில் இந்தியத் தயாரிப்பு

முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட வடிவமைப்பு, 4ஜி ஸ்டேக் ஆகியவை இறுதிகட்ட மேம்பாட்டுப் பணியில் உள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என்றும் தொலைத் தொடர்புத் துறைச் செயலரும், டிசிசி தலைவருமான ராஜாராமன் உறுதிசெய்துள்ளார்.

இத்துறையின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 5ஜி தொழில்நுட்பம் மேம்பாட்டுப் பணியில் இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது தொழில்நுட்ப நிறுவனங்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்

மேலும் அந்த உயர் அலுவலர், "இந்திய, உலகளாவிய சந்தைகளில் ஃபின்டெக் (FinTech) தீர்வுகளின் பரவலுக்கு 5ஜி வழிவகுக்கும். உலக நாடுகளுக்கு உகந்த வகையில் 5ஜி தொழில்நுட்பக் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

2022-23ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை

நாட்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொலைத்தொடர்புத் துறையில் 5ஜி நெட்வொர்க்கிற்கு இந்தாண்டு அரசு ஏலம் விடும் என்பதை உறுதிசெய்தார்.

இது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையை நுகர்வோர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்கிறது. மேலும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது, "பொது மற்றும் குறிப்பாக 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்புப் பிரிவில் வேலைவாய்ப்பை வழங்க முடியும்.

2022ஆம் ஆண்டுக்குள் அலைக்கற்றை ஏலம் விடுவதன் வாயிலாக 5ஜி மொபைல் சேவையை 2022-23ஆம் ஆண்டுக்குள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விற்பனையைத் தொடங்க முடியும்" எனக் கூறினார்.

சாதாரண பயனர்களும் பயன்படுத்தலாம்

பின்னர், துறையின் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 5ஜி நெட்வொர்க்கிற்காக அரசு ஏலம் விடத் திட்டமிட்டுள்ளதை உறுதிசெய்தார். இந்தத் தொழில்நுட்பம் வெளியானால் சாதாரண பயனர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தொழில்நுட்பம், ஏல முறை குறித்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் பரிந்துரைகள் மார்ச் இறுதிக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இதையும் படிங்க: சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி

Last Updated : Feb 9, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details