தமிழ்நாடு

tamil nadu

அதானி குடோனில் பயங்கர தீ விபத்து.. 12 மணி நேரம் போராடியும் 70% தீயை மட்டும் கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 5:45 PM IST

fire breaks out in Adani Group's godown: உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் அதானி குழுமத்துக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சுமார் 12 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் 70% தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Etv Bharat
Etv Bharat

சஹாரன்பூர்: உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம், பெஹாட் சாலை ரசூல்பூர் பகுதியில் அதானி குழுமத்துக்கு சொந்தமான உணவுப் பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து உத்தரகாண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்காக பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் குடோனில் இருந்து நேற்று (நவ. 25) திடீரென புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், குடோனில் எண்ணெய் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்ததால், தீயானது மளமளவென பற்றி எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தீயணைப்புத் துறையினரால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் லக்னோவில் உள்ள தலைமையிடத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில், 6 மாவட்டங்களில் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேரம் போராடி 70% தீயை அணைத்தாகவும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சஹாரன்பூர் தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதாப் சிங் கூறுகையில், "நள்ளிரவு 1 மணி அளவில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், தீயானது மளமளவென பற்றி எரியத் தொடங்கியதால் லக்னோவில் உள்ள தலைமையிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முசாபர்நகர், மீரட், ஷாம்லி, அம்ரோஹா மற்றும் பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

மேலும், குடோனில் தகர கொட்டகை இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெரும் சிரமம் ஏற்பட்டது. பின் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 12 மணி நேரம் போராடி 70 சதவீதம் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:இஸ்ரேல் - ஹாமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி - பரஸ்பர இரு தரப்பு பணயக் கைதிகள் விடுதலை! எத்தனை பேர் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details