தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மியான்மர் வெளியுறவு அமைச்சருடன் EAM ஜெய்சங்கர் சந்திப்பு : இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நெடுஞ்சாலைத் திட்டம் பற்றி ஆலோசனை!

தாய்லாந்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். இதில், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

eam
மியான்மர்

By

Published : Jul 16, 2023, 3:23 PM IST

பாங்காக்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக கடந்த வாரம் இந்தோனேசியா சென்றார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அவருடன் உக்ரைன் போர், இந்தோ-பசிபிக் உள்ளிட்டப் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து நேற்று(ஜூலை 15) அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து சென்றார். தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். இதையடுத்து இன்று மீகாங்-கங்கா ஒத்துழைப்புக் கூட்டத்தின் (Mekong Ganga Cooperation -MGC) ஒரு பகுதியாக, மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் 'தான் ஸ்வே'வை சந்தித்தார். இந்தச் சந்திப்பில், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து தேசிய நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "பிராந்திய முக்கியத்துவம் கொண்ட விவகாரங்கள் குறித்துப் பேசினோம். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சவாலான திட்டங்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தோம்.

மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நமது எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், நிலைமையை மோசமாக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். மியான்மரில் அமைதி திரும்புவதற்கான அவசியம் குறித்து பேசினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் இடையே 1,400 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முத்தரப்பு நெடுஞ்சாலை மியான்மர் வழியாக தாய்லாந்தில் உள்ள மே சோட்டுடன் இந்தியாவின் மணிப்பூரில் உள்ள மோராவை இணைக்கும்.

இந்த முத்தரப்பு சாலையின் மூலம் தென்கிழக்கு ஆசியாவுடன் தரைவழிப் போக்குவரத்துக்கான தொடர்புகளை கணிசமாக அதிகரிக்க முடியும் என்றும் -வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா உறவுகளுக்கு இந்த முத்தரப்பு சாலை உத்வேகம் அளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 70 சதவீதப் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. இந்தச் சாலைப் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன.

இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்புமனுத் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details