தமிழ்நாடு

tamil nadu

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்புமனுத் தாக்கல்!

By

Published : Jul 11, 2023, 7:33 AM IST

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மீண்டும் குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

External Affairs Minister Jaishankar files Rajya Sabha nomination in Gujarat Gandhinagar
External Affairs Minister Jaishankar files Rajya Sabha nomination in Gujarat Gandhinagar

அகமதாபாத் (குஜராத்): தன்னுடைய ராஜ்ய சபா எம்பி பதவிக்காலம் முடிவதையொட்டி நேற்றைய முன்தினம் குஜராத் வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று (ஜூலை 10) குஜராத் காந்தி நகர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், குஜராத்தில் இருந்து மற்ற இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களுடன், இரண்டாவது முறையாக அதே மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் ஜெய்சங்கருடன் சட்டமன்ற வளாகத்திற்குச் சென்றனர். அங்கு ராஜ்ய சபா தேர்தல் அதிகாரியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஜெய்சங்கர், பிரதமர் மோடிக்கும், பாஜக தலைமைக்கும், குஜராத் மக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தை ராஜ்யசபாவில் பிரதிநிதித்துவப்படுத்தியது தனக்கு கிடைத்த கெளரவம் என்றும், பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் நடக்கும் மாற்றத்தின் ஒரு பகுதியாக மாற இது வாய்ப்பளித்ததாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, ஜெய்சங்கரை அகமதாபாத் விமான நிலையத்தில் அமைச்சர் ராகவ்ஜி படேல், அகமதாபாத் மேயர் கிரிட் பர்மர் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வரவேற்றனர். வருகிற 24ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஜெய்சங்கரின் வேட்புமனு உறுதியானது என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபுறம், 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் போதிய எம்எல்ஏக்கள் இல்லாததால், மூன்று ராஜ்யசபா தொகுதிகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியுள்ளது. குஜராத் 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 156 இடங்களை வென்ற நிலையில், காங்கிரஸுக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

குஜராத்தில் உள்ள 11 ராஜ்யசபா தொகுதிகளில், பாஜவுக்கு 8 இடங்களும், மீதமுள்ள 3 இடங்கள் காங்கிரஸிடமும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பாஜகவின் 8 இடங்களில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜுகல்ஜி தாக்கூர் மற்றும் தினேஷ் அனவாடியா ஆகியோரின் ராஜ்யசபா பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் 18 உடன் முடிவடைகிறது.

இந்த மாதம், இந்திய தேர்தல் ஆணையம் கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 10 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை வருகிற 24இல் நடத்த உள்ளது. இந்த இடங்களில் உள்ள தற்போதைய எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது. ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 13 கடைசி நாளாகும். ராஜ்ய சபா தேர்தலின் வாக்கு எண்னிக்கை, அதே நாளான ஜூலை 24ஆம் தேதியே நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி... இவர் தான் பர்ஸ்ட் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details