தமிழ்நாடு

tamil nadu

"2024ல் செங்கோட்டையில் அல்ல, வீட்டில்தான் கொடி ஏற்றுவார் மோடி" - கார்கே பதிலடி!

By

Published : Aug 15, 2023, 2:40 PM IST

Independence Day 2023: அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் கொடி ஏற்றுவேன் என்று பிரதமர் மோடி கூறுவது ஆணவப் பேச்சு என்றும், அடுத்த ஆண்டு அவர் வீட்டில்தான் கொடி ஏற்றுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Independence Day
சுதந்திர தினம்

டெல்லி:சுதந்திர தினத்தையொட்டி இன்று(ஆகஸ்ட் 15) காலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றினார். பத்தாவது முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர், சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது என்றும், உலகப் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த நாட்டை ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம் என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவேன் என்றும், அப்போது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களையும் பட்டியலிடுவேன் என்றும் தெரிவித்தார்.

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கும் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் கார்கே கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, "முதல் காரணம் எனக்கு கண் சார்ந்த சில பிரச்சினைகள் இருக்கின்றன. இரண்டாவது காரணம், நெறிமுறைகளின்படி, நான் எனது இல்லத்தில் 9.20 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைக்க வேண்டும். அதன் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும். இந்த சூழலில், பிரதமர் வருகையால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக உள்ளது. நான் செங்கோட்டைக்கு சென்றால், இந்த கெடுபிடிகளால் திரும்பி வர தாமதமாகிவிடும். அதனால், நேரப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கோட்டைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என நினைத்தேன்" என்றார்.

அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவேன் என பிரதமர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கார்கே, "ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது மக்கள் கையில்தான் உள்ளது. அடுத்த ஆண்டும் மீண்டும் கொடி ஏற்றுவேன் என்று கூறுவது ஆணவம். சுதந்திர தினத்தன்றுகூட எதிர்க்கட்சிகளைப் பற்றி தொடர்ந்து குறை கூறிவந்தால், அவர் தேசத்தை எப்படி கட்டியெழுப்புவார்? - அவர் கூறியது போல அடுத்த ஆண்டும் அவர் கொடி ஏற்றுவார், ஆனால் அது செங்கோட்டையில் அல்ல, அவரது வீட்டில்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சுதந்திர தினம் 2023: செங்கோட்டையில் 10வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details