ETV Bharat / bharat

சுதந்திர தினம் 2023: செங்கோட்டையில் 10வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

author img

By

Published : Aug 15, 2023, 11:49 AM IST

Independence Day 2023: இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசியகீதம் இசைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “140 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைவதாகவும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

தொடர்ந்து மணிப்பூர் வன்முறை குறித்து பேசிய அவர், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்றும், மணிப்பூர் மக்களின் பாதுகாப்பிற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் மணிப்பூரில் மீண்டும் அமைதி நிலவும் என்றும் பேசினார்.

மேலும், 2047-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாடு வளர்ந்த இந்தியாவாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், ஊழல், வாரிசு அரசியல், கொள்கைளில் சமரசம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராடுவது இப்போதைய தேவை. ஊழல் இந்தியாவின் திறனை மோசமாக பாதித்துள்ளது. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்பது மோடியின் வாழ்நாள் அர்ப்பணிப்பு என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், துடிப்பான எல்லை கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த எண்ணத்தை மாற்றினோம். அவை நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல. எல்லையில் நீங்கள் பார்ப்பது எனது நாட்டிலேயே முதல் கிராமம் என்றார்.

மேலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் விஷயங்களில் ஒன்று, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி. இன்று சிவில் ஏவியேஷன் துறையில் அதிக எண்ணிக்கையிலான விமானிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன் சொல்லலாம். சந்திரயான் பணியை பெண் விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஜி20 நாடுகளும் அங்கீகரித்து வருகின்றன.

விண்வெளி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவின் திறன். ஆழ்கடல் பணி, ரயில்வேயின் நவீனமயமாக்கல் - வந்தே பாரத், புல்லட் ரயில் - அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். இணையம் கிராமத்தை எட்டிவிட்டது. நானோ யூரியா தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதே நிலையில், இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

மேலும், நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். முத்ரா யோஜனா திட்டம் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் மக்களுக்கு கிடைத்துள்ளன. இந்திய விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் உள்ளிட்டவை கிடைக்க பத்து லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இறுதியாக 2014-ல் தாங்கள் ஆட்சிக்கு வந்தபோது உலகப் பொருளாதார அமைப்பில் 10வது இடத்தில் இருந்தோம் என்றும், இன்று 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளோம் என்று கூறினார். இந்த விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: Independence day 2023: சுதந்திர தினத்திற்காக ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.