ஜெய்சால்மர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தின் ஷாகர் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் பகுதியிலிருந்து பயிற்சி கழுகு ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் (BSF) இன்று (டிச.28) பிடித்துள்ளனர். இந்த கழுகின் காலில் மோதிரம் போன்ற வளையம் இருந்துள்ளது. மேலும், இந்த மோதிரத்தில் ரகசிய எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கழுகு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த கழுகு, அரபு நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அரபு நாடுகளில் இது போன்ற பயிற்சி கழுகுகள் வளர்க்கப்படுகிறது. இவை அரிய வகை ஹௌபரா பஸ்டர்டு பறவைகளை வேட்டையாடுவதற்காகப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லைக்குள் வந்த பறவையின் காலில் மோதிரம் போன்ற வளையம் ரகசிய எண்களுடன் இருந்தது. ஆனால் டிரான்ஸ்மிட்டர் மற்றும் கண்காணிப்பு கேமரா போன்றவை பொருத்தப்படவில்லை என எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கழுகின் காலில் பொருத்தப்பட்டுள்ள மோதிரத்திலுள்ள ரகசிய எண்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளிலிருந்து அரிய வகை ஹௌபரா பஸ்டர்டு பறவைகளை வேட்டையாட வரும் கழுகுகள், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் முகாமிடுவதாகவும், பின் அங்கு இருந்து இந்தியாவின் எல்லைக்குள் பறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று, பல பறவைகள் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டு, பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சுற்றுலாவில் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த தலைமை ஆசிரியை..! நடவடிக்கை எடுக்கப் பெற்றோர் கோரிக்கை!