தமிழ்நாடு

tamil nadu

மத்திய விஸ்டா திட்டம் : தடைகோரும் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

By

Published : Jul 14, 2020, 7:06 PM IST

டெல்லி : தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விஸ்டா திட்டத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மத்திய விஸ்டா திட்டம் : தடைகோரும் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!
மத்திய விஸ்டா திட்டம் : தடைகோரும் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களை ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் சீரமைப்பு செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சென்ட்ரல் விஸ்தா என்ற பெயரில் அழைக்கப்படும் இத்திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் குஜராத்தைச் சேர்ந்த எச்.சி.பி. டிசைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. டெல்லி இந்தியா கேட் தொடங்கி குடியரசு தலைவர் மாளிகை இடையே இந்த சென்ட்ரல் விஸ்தா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய நாடாளுமன்றமும், 2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் மத்திய அரசின் பொது தலைமை செயலகமும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதனை எதிர்த்து ராஜிவ் சூரி என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அம்மனுவில், "டெல்லியின் மிக முக்கிய இடமான மத்திய பகுதியில் இந்தத் திட்டத்திற்காக 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

இதனால் ஏராளமான மரங்கள் அழிக்கப்படும். ஏற்கனவே, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, மேலும் பாதிப்பு அடையும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வுக்கு முன்பு காணொலி வாயிலாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அரசு சார்பாக தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா," இந்த மனு தொடர்பான மத்திய அரசின் விளக்கத்தை எளிதாக விளக்க முடியாது. நீண்ட கால அவகாசம் தேவை" என்று அவகாசம் கோரினார்.

அப்போது மனுதாரர்களும், பதிலளித்தவர்களும் ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு தயாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்குரைஞர் மேத்தா, இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், கால அவகாசம் வேண்டுமென மீண்டும் கோரினார்.

இதனையடுத்து, நீதிமன்றம் வழக்கின் மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்துவைத்தது. கரோனா வைரஸ் நோய்தொற்றால் நாடு முழுவதும் மக்கள் வாடி வரும்போது கட்டடங்களைப் புதுப்பிக்க 20 ஆயிரம் கோடி ரூபாயை செலவழிப்பதை சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details