தமிழ்நாடு

tamil nadu

'எங்க மருந்து கரோனாவைக் குணப்படுத்தும்னு நாங்க சொல்லவே இல்லையே' - பதஞ்சலி அந்தர்பல்டி

By

Published : Jun 30, 2020, 7:36 PM IST

லக்னோ: தாங்கள் வெளியிட்டுள்ள கரோனானில் மருந்து கரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறவில்லை என்று பதஞ்சலி நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

Patanjali
Patanjali

இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகிவருகிறது. கரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கரோனாவுக்குச் சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிறுவனம் கடந்த வாரம் கரோனா தொற்றை ஏழு நாள்களில் குணப்படுத்த முடியும் என்று கூறி ஒரு ஆயுர்வேத மருந்தை வெளியிட்டது. இருப்பினும், முறையான அனுமதி பெறாமல் வெளியிடப்பட்ட இந்த மருந்து குறித்த விளம்பரங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் தடைவிதித்தது. மேலும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களும் பதஞ்சலி மருந்துக்குத் தடைவிதித்தது.

இது அந்நிறுவனத்திற்குச் சட்டச் சிக்கலை அதிகரித்தது. தற்போது இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா, "கரோனா தொற்றை எங்கள் மருந்து குணப்படுத்தும் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளைத் தயாரிக்கவே நாங்கள் உரிமத்தைப் பெற்றுள்ளோம். நாங்கள் வெளியிட்டுள்ள 'திவ்யா ஸ்வாசரி வதி', 'திவ்யா கரோனில் டேப்லெட்', 'திவ்யா அனு டெயில்' ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

இது எங்கள் நிறுவனத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி. மீண்டும் மருத்துவப் பரிசோதனைகளை நடத்தவும், நாங்கள் தயாராக உள்ளோம். ஜெய்பூரிலுள்ள நிம்ஸ் (NIMS) பல்கலைக்கழகம் எந்தவொரு மருத்துவச் சோதனை விதிமுறையையும் மீறவில்லை. அதேபோல நாங்களும் எவ்வித தவறான கூற்றுகளையும் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு மருந்தையும் நாங்கள் உற்பத்தி செய்யவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். முன்னதாக, கரோனா வைரசைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி, மக்களை ஏமாற்றியதாக யோகா குரு ராம் தேவ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'கரோனா மருந்து விலை மலிவாக இருக்க வேண்டும்' - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details