தமிழ்நாடு

tamil nadu

ஓணம் திருநாள்: பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் வாழ்த்துகள்!

By

Published : Aug 31, 2020, 11:27 AM IST

அறுவடைத் திருநாளான ஓணம் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Onam
Onam

கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று அழைக்கப்படும் ஓணம் திருநாள் ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலமிட்டு கொண்டாடப்படுகிறது. தீரமும், ஈரமும் மிகுந்த மகாபலி சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வரவேற்கும் நாளாக தொடங்கி, அடுத்தடுத்த நாள்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவு பரிமாறுதல் போன்றவற்றைத் தாராளமாக பகிர்ந்துகொண்டு, தங்களுக்குள் உள்ள மேம்பட்ட உறவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விழா இது.

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, ஓணம் கொண்டாட்டங்களை சற்று ஆடம்பரமிழக்கச் செய்தாலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளுடன் மகிழ்வுடன் திருவோணத்தை இன்று (ஆகஸ்ட் 31) கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ஓணம் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓணம் திருநாளைக் கொண்டாடுபவர்களுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், “ஓணம் திருநாள் வாழ்த்துகள். நல்லிணக்கத்தைக் கொண்டாடும் இந்த பண்டிகை தனித்துவமானது. மேலும், இவ்விழா கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கான சந்தர்ப்பமாகும். அனைவருக்கும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் ஆசீர்வதிக்கப்படட்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் போலவே குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய பயிரின் வருகைக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றித் தெரிவிக்கும் பாரம்பரிய கலாசார பின்னணி கொண்ட விழா. அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள். சமூகத்தில் கடைநிலை ஊழியர்களாக கரோனா நெருக்கடியில் அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவுவோம். கோவிட்-19 பரவாமல் இருக்க அரசின் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேளாண்மைத் திருவிழாவான ஓணம் திருநாளுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓணம் திருநாளைக் கொண்டாடும்போது, மகாபலி அரசரின் நேர்மை, கருணை, தன்னலமற்ற குணம், தியாகம் ஆகியவற்றை நினைவுகூருவோம். கரோனா பரவலை கருத்தில் கொண்டு, அனைவரும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில் எளிமையான முறையில் ஓணம் திருநாளைக் கொண்டாடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக ஓணம் திகழ்கிறது' - மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details