அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வந்த கிரிஷக் முக்தி சங்கிராம் சமிதி என்ற விவசாய அமைப்பின் தலைவரும், ஆா்டிஐ ஆா்வலருமான அகில் கோகோய் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அன்று என்ஐஏ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் வாயிலாக நாட்டில் பயங்கரவாதத்தை பரப்ப முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மாவோயிஸ்ட் அமைப்புடன் அவருக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறி விசாரணை கைதியாகவே கடந்த ஓராண்டாக அவரை சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், தன்னை பிணையில் விடுதலை செய்யும்படி கோரிக்கை வைத்த அகில் கோகோயின் சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற நிலையில், அதனை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த அகில் கோகோயின் வழக்குரகஞர் சந்தானு போர்த்தாகூர், "கோகோயின் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விரிவான தீர்ப்பை நாங்கள் இன்னும் ஆய்வு செய்யவில்லை, அதனால் நிராகரிப்பதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. அடுத்த ஏழு நாள்களில் அஸ்ஸாம் உயர் நீதிமன்றத்தில் அவருக்கு பிணை வேண்டி வழக்கு தொடர உள்ளோம்" என கூறினார்.
கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி தலைவர் கோகோய், கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டு தற்போது கவுஹாத்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.