கொல்கத்தா:மேற்கு வங்கம் மாநிலம் கரோனா இரண்டாம் அலை, யாஸ் புயல் ஆகியவற்றால் பொருளாதார ரீதியில் பேரிழப்பைச் சந்தித்துள்ள நிலையில், அம்மாநில நிதிமைச்சர் அமித் மித்ரா ஒன்றிய அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த ஆண்டைப் போன்று இந்தாண்டும், மாநிலங்களின் நிதி ஆதாரம் பெரும் அச்சுறுத்தலையும், மாநில வருவாய் என்பது தொடர் சரிவையும் சந்தித்துவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இரட்டை பாதிப்பு
ஆனால், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, கரோனா இரண்டாம் அலை பாதிப்பு, யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு என இரண்டு பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2020 முதல் ஜனவரி 2021 வரை, ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு ஏறத்தாழ ரூ.6,300 கோடி கடன்பட்டுள்ளது. இதில், மேற்கு வங்கம் மாநிலத்திற்கு மட்டும் ரூ.4,911 கோடி ஒன்றிய அரசு அளிக்க வேண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கும்பட்சத்தில்தான், மாநிலத்தின் கடும் நிதிச்சுமையைக் குறைக்க இயலும் எனவும் அமித் மித்ரா நிர்மலா சீதாராமனுக்குக் கோரிக்கைவைத்துள்ளார்.
இதையும் படிங்க: கறுப்புப் பூஞ்சை: கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!