தமிழ்நாடு

tamil nadu

G20:காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்; தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய ராணுவம்

By

Published : May 21, 2023, 9:50 PM IST

ஜி20 மாநாட்டை முன்னிட்டு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்றவரை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

Army opens
ராணுவம்

ஶ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், நேற்று (மே.20) அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். இதனைக் கண்ட பாதுகாப்புப் படையினர், அந்த தீவிரவாதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த தீவிரவாதியிடமிருந்து வெடிகுண்டு மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நாளை(மே.22) தொடங்கவுள்ள நிலையில், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடந்ததால் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர்.

இந்த சூழலில், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று (மே.21) அதிகாலையில் மெந்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபரின் நடமாட்டத்தைக் கண்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கிழக்கு லடாக்கில் சீனாவின் ஊடுருவல் - ஜி7 மாநாட்டில் உண்மையை உடைத்த பிரதமர் மோடி!

பின்னர், அப்பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், எந்தவித பதில் தாக்குதலும் இல்லை என்றும், இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர். எல்லைப்பகுதியில் இந்த சந்தேகத்திற்கிடமான வேறு நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜி20 மாநாடு; பலத்த பாதுகாப்பு:ஜம்மு-காஷ்மீரின் ஶ்ரீநகரில் ஜி20 நாடுகளின் சுற்றுலாப் பணிக்குழு கூட்டம் நாளை தொடங்கவுள்ளது. நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. டால் ஏரியின் கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் மாநாடு நடைபெறுகிறது. இதில், ஜி20 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். காஷ்மீரில் மாநாடு நடக்கவிருப்பதால், இதில் சீனா கலந்து கொள்ளாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஜி20 மாநாட்டிற்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை தரவிருப்பதால் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஶ்ரீநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கின்றனர். எல்லைப் பகுதியிலும், ஶ்ரீநகரில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செனாப் ஆறு பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக, ஜி20 மாநாடு காஷ்மீரில் நடத்த திட்டமிட்டிருந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீர் எல்லையில் நடந்த தேடுதல் வேட்டையில் ஃபரூக் அகமது என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பாகிஸ்தானின் உளவு அமைப்பினருடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு - பிரதமர் மோடி மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details