தமிழ்நாடு

tamil nadu

மணிப்பூர் விவகாரத்தைத் தூண்டிவிடாதீர்கள்.. அரசியலாக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்.. அமித் ஷா குற்றச்சாட்டு!

By

Published : Aug 9, 2023, 7:59 PM IST

கடந்த பல ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாத விஷயங்களை வெறும் 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்து காட்டி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

Amit Shah
Amit Shah

டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் விவகாரத்தை மக்களவையில் தூண்டிவிடாதீர்கள் என்று ராகுல் காந்தியை சாடினார்.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று (ஆகஸ்ட். 9) நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதத்தை மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகாய் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர். இந்நிலையில், மாலையில் அவை மீண்டும் கூடிய நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கண்டனத்திற்குரியது என்றும்; மே 4 அன்று பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் வீடியோவாக படமாக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக வெளியிடப்பட்டு அதை வைத்து அரசியல் செய்வதாக கூறினார்.

மணிப்பூர் விவகாரத்தை மேலும் தூண்டிவீடாதீர்கள் என்றும்; ராகுல் காந்தியை உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடினார். இதற்கு முன் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் ஏறத்தாழ 2 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் அப்போது பிரதமர் அறிக்கை அளிக்க யாராவது கேட்டீர்களா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

முன்னதாக மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின்போது நாகா - குக்கி இன மக்களிடையே ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கலவரம் நீடித்ததாகவும், அப்போது 700 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏறத்தாழ 45 ஆயிரம் மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடமாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

மெய்தி இன மக்களை பழங்குடியினர்களாக அறிவிக்க மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து குக்கி குழுக்கள் கோபமடைந்து வன்முறை தொடங்கியதாகவும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புகலிடம் வழங்க பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

முன்னரே இதேபோன்ற பிரச்னை நடக்கக் கூடும் என உணர்ந்த பாஜக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022ஆம் ஆண்டு எல்லையில் வேலி அமைத்ததாக கூறினார். மியான்மர் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தற்காப்புக்காக அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் குக்கி இன மக்கள் என்றும்; கடந்த ஆறு ஆண்டுகளில் மணிப்பூரில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை என்றும்; ஒரு முறை கூட அரசு தடுப்பு பாதுகாப்பு ஏற்படுத்தவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தாயராக இருக்கும்போது எதிர்க்கட்சிகள் நாடாகமாடுவது ஏன் என அமித் ஷா கேள்வி எழுப்பினார். வட கிழக்கு மாநிலங்களுக்காக எதிர்க்கட்சிகள் இதுவரை எதுவும் செய்ததில்லை என்றும்; ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மட்டும் கோருவதாக அமித் ஷா கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் பிரதமர் மோடி 50க்கும் மேற்பட்ட முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், அரசின் பயனுள்ள கொள்கைகளால் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் எப்போதும் இல்லாத அளவு குறைந்துவிட்டதாக அமித் ஷா குறிப்பிட்டார். வடகிழக்கில் நக்சலிசம் என்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதல் ஏறத்தாழ 68 சதவீதம் வரை குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 1 கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருகை தந்ததாகவும்; ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு சினிமா காட்சிகள் மற்றும் இரவு நேர சினிமாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும் காஷ்மீரில் வெற்றிகரமாக பஞ்சாயத்து தேர்தலை நடத்திக் காண்பித்தவர் பிரதமர் மோடி, முன்னர் மெகபூபா முப்தி, ஃபரூக் மற்றும் காந்தி குடும்பத்தினரால் காஷ்மீர் கட்டுப்பட்டுத்தப்பட்டு இருந்ததாகவும் அமித் ஷா கூறினார்.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததாகவும் பாகிஸ்தான் ஹுரியத் அல்லது ஜமியத்துடன் பேச மாட்டோம் என்றும்; காஷ்மீர் மக்களிடம் நேரடியாக பேசுவோம் என்று அமித் ஷா குறிப்பிட்டார். நாட்டு மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் 25 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வழங்கப்பட்டு உள்ளதாக அமித் ஷா கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி அயராமல் பணியாற்றுவதாகவும், நாட்டு மக்களால் மிகவும் விரும்பப்படும் தலைவர் நமது பிரதமர் என்றும் அமித் ஷா தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முதன்மையான பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும்; காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் விலக்கு அளித்து உள்ள நிலையில், பாஜக அரசு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைத்து உள்ளதாக அமித் ஷா கூறினார்.

இதையும் படிங்க :ராகுல் காந்தி உரையில் அவருக்கே முன்னுரிமை இல்லையா? சன்சாத் டிவி பாரபட்சம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details