தமிழ்நாடு

tamil nadu

heatstroke: மகாராஷ்டிரா அரசு விழாவில் வெயில் தாக்கத்தால் 11 பேர் மரணம்!

By

Published : Apr 17, 2023, 7:34 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் கார்கர் பகுதியில் திறந்த வெளியில் நடந்த மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ராய்கட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு அரசு விருது (maharashtra bhushan award) வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் கபில் பாட்டீல், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த அதில், மேடை நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெயிலை மறைக்கப் பந்தல் ஏதும் போடப்படவில்லை.

காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பரிசளிப்பு விழா பிற்பகல் 2 மணி வரை நடந்தது. அந்த நேரத்தில் வெப்பநிலை அளவு அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவானதாகக் கூறப்படுகிறது. இதனால் விழாவைக் காண வந்த பலரும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சுட்டெரிக்கும் வெயிலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஷிண்டே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளதாகவும் 24 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அதில் இருவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகப் பேசிய பன்வெல் நகராட்சி துணை ஆணையர்,"அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். விழா சிறப்பாக நடந்தது. ஆனால் இந்த துரதிருஷ்டவசமான சூழ்நிலையால் பலரது குடும்பம் துன்பத்தைச் சந்தித்துள்ளது கடும் வேதனையை அளிக்கிறது" என்று கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்ரே உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, "இந்த சம்பவத்தை யார் விசாரணை நடத்துவது?, யார் பொறுப்பேற்பது என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்ச்சியை ஒழுங்காக திட்டமிடாததே இந்த விபத்திற்கு காரணம்" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தர்மாதிகாரிக்கு விருதை வழங்கி, அவருக்குச் சால்வை, பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசு மற்றும் 25 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் 10 அடி ரோஜா மலர் மாலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IPL 2023: குஜராத் அணியை துவம்சம் செய்து முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details