தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன்முதலில் வீர வாள் உயர்த்தியவர் பூலித்தேவர் - வைகோ புகழஞ்சலி

மன்னர் பூலித்தேவரின் புகழ் திக்கெட்டும் பரவுக என அவரின் 311 ஆவது பிறந்தநாளில் மதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 5:38 PM IST

சென்னை:இந்தியாவிலேயே வெள்ளையர் படைகளை எதிர்த்து முதன் முதலில் வீர வாள் உயர்த்தி வெற்றி வாகை சூடிய புகழ் மன்னர்தான் பூலித்தேவர் என அவரின் 311வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பூலித்தேவரின் 311வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவுக்கூர்த்து அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பூலித்தேவரின் வாழ்க்கை வரலாற்றையும், ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டு அவர் வெற்றி பெற்றது குறித்தும் புகழாரம் சூட்டியுள்ளார்.

நெல்கட்டும் செவல் மாமன்னர் பூலித்தேவர்

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், “இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த இந்திய உபகண்டத்தில் வணிகம் செய்ய வந்து ஆட்சியாளர்களாக மாறி இந்தியாவை தங்களின் காலனி தேசமாக்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உபகண்டத்திலேயே முதன் முதலாக வாள் உயர்த்தி சமர்க்களங்கள் பலவற்றில் பிரித்தானிய கும்பினிப் படைகளைத் தோற்கடித்து வீர சாதனை சிங்கமாக வரலாற்றில் உயர்ந்திருப்பவர்தான் நெல்கட்டும் செவல் மாமன்னர் பூலித்தேவர் ஆவார்!

அவர் சித்திரபுத்திர தேவருக்கும் - சிவஞான நாச்சியாருக்கும் வீரத் திருமகனாக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல் நாளில், ஆவணித் திங்கள் 16 ஆம் நாளில் பிறந்தார். அவரது 311 ஆவது பிறந்த நாள் இந்த செம்டம்பர் 1ஆம் தேதி மலர்வதால், அவருக்குப் புகழ் மலர்களைச் சூட்டுவது செந்தமிழ் நாட்டின் வீரத்திற்கு மகுடம் சூட்டுவதாகும். அவரது பெற்றோர் இட்ட பெயர் காத்தப்ப பூலித்தேவன். பிற்காலத்தில் பூலித்தேவர் என்று அவரது பெயர் புகழ் பரப்பியது.

12 வயதிலேயே மன்னரானார்

1727ஆம் ஆண்டு தனது 12 ஆவது வயதிலேயே நெல்கட்டும் செவல் பாளையத்திற்கு மன்னரானார் பூலித்தேவர். வேங்கைப் புலிகளை அடக்கி மடக்கி அதன் நகங்களை அரிந்தும், புலித்தோலை இடையில் கட்டியும் நெடிதுயர்ந்த உருவம், சிறு குன்றங்களென தோள்கள், வைரச் சிலை போன்ற உடற்கட்டு, முழங்கால் வரையில் நீண்டிருக்கும் வலுவான கரங்களைக் கொண்ட பூலித்தேவர், தன் மாமன் மகள் கயல்கண்ணி என்ற லட்சுமி நாச்சியாரை மணம் புரிந்தார்.

ஒரு கட்டத்தில் பூலித்தேவர் இலவந்தூர் - ஈராச்சி எல்லைத் தகராறை தீர்த்து வைக்கச் சென்ற வேளையில், சிவகிரி பாளையக்காரர் வரகுணன், நெல்கட்டும் செவலில் புகுந்து கால்நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்த செய்தி அறிந்த பூலித்தேவர் கடும் போர் புரிந்து சிவகிரி பாளையத்தை வென்று கால்நடைகளை மீட்டார்.

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாராலும் அடக்க முடியாத புலியை நெல்கட்டும் செவல் மன்னர் அடக்கிக் கொன்றதால் வடக்காத்தான் புலித்தேவன் என்ற பட்டத்தை மதுரை மன்னராக இருந்த விசயரங்க சொக்கநாதர் வழங்கினார். ’நெற்கட்டும் பூலி என்றால் திக்கெட்டும் தான் நடுங்கும். மற்கட்டும் வீரர் எல்லாம் வெருவி வந்து வழங்கிடுவார்’ என்பது நாட்டுப்புறப் பாடலாகும்.

ஆங்கிலேயர்களை தோற்கடித்த பூலித்தேவர்

1755 இல் பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய கர்னல் ஹெரான் படையெடுத்து வந்தபோது, பெரும் ஆயுத பலம் கொண்ட ஹெரான் சேனையை பூலித்தேவர் எதிர்கொண்டு தாக்கி தோற்கடித்து ஓடச் செய்தார். அதே ஆண்டில் களக்காட்டுப் போரிலும் பூலித்தேவர் வெற்றி பெற்றார். அடுத்த 1756ஆம் ஆண்டில் நடைபெற்ற திருவில்லிபுத்தூர் போரிலும் வென்றார்.

ஜிப்ரால்டர் கோட்டையைப் போல வாசுதேவநல்லூரில் கோட்டை எழுப்பினார். மருதநாயகம் எனும் கம்மாந்தான் கான்சாகிப் பெரும் படையோடு வாசுதேவநல்லூரைத் தாக்கியபோது, அடுத்தடுத்து வெடிகுண்டுகளை வெள்ளையர் படை வீசியபோதும், இரண்டு மாதங்கள் நடைபெற்ற யுத்தத்தில் கான்சாகிப் தோற்று ஓடினான்.

1760 ஜனவரி 28இல் கான்சாகிப் தோல்வி அடைந்த செய்தி சென்னைக்குச் சென்றது. வெட்டப்பட்ட கும்பனி தளபதிகளின் தலைகள் வாசுதேவநல்லூர் கோட்டை வாயிலில் தோரணமாகக் கட்டித் தொங்கவிடப் பட்டன.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த பெரிய காலடியையும், வெண்ணிக் காலடியையும் சாதி வித்தியாசம் என்னும் எண்ணத்திற்கே இடம் தராமல் தன் சகோதரர்களாய் அரவணைத்தார் பூலித்தேவர். வயிற்றில் வெட்டுப்பட்டு, குடல் சரிந்த நிலையிலும் தலைப்பாகையினால் வயிற்றைக் கட்டிக் கொண்டு போர் புரிந்தவன் வீராதி வீரன் வெண்ணிக் காலாடி.

அருந்ததியர் குலத்தில் பிறந்த வீராதி வீரன் ஒண்டி வீரன், வெள்ளைப் பட்டாளம் இருந்த இடத்திற்கு நள்ளிரவில் சென்று, அப்படைத்தலைவனின் வாளையும், குதிரையையும் கைப்பற்றி நெல்கட்டும் செவலுக்குத் திரும்பியபோது அவன் உள்ளங் கை துளையிடப்பட்டு இரத்தம் கொட்டும் நிலையில், மகனே என்று சொல்லி கட்டி அணைத்தார் பூலித்தேவர்.

இதையும் படிங்க:மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை

தோல்வி முகம் காணாமல் தனிக்கொடி ஏற்றிய தமிழன்

1755 கர்னல் ஹெரானைத் தோற்கடித்தது முதல் 1767 வரை 12 ஆண்டுகள் பரங்கியர் படையை எதிர்த்து தலைதாழாமல், தோல்வி முகம் காணாமல் தனிக்கொடி ஏற்றி தனது அரசை அமைத்த முதல் தமிழன் வீரவேந்தன் பூலித்தேவன் ஆவார்.

பூலித்தேவர் எண்ணற்ற ஆலயங்களுக்கு மண்டபங்கள் கட்டிக் கொடுத்தார். சுனைகள் வெட்டி வைத்தார். கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் கோயிலில் மடைப்பள்ளியும், முன் மண்டபமும் கட்டினார். வாசுதேவநல்லூர் கோயில் முன் மண்டபத்தில் பூலித்தேவர் சிலை உள்ளது. இதனை பூதத்தான் சிலை என்பர்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமான தங்க நகைகளையும் வாகனங்களையும் வழங்கியவர் பூலித்தேவர். சீவலப்பேரி அருகே முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்ட போது அங்கு சென்று அவர்களைப் பாதுகாத்தவர் பூலித்தேவர். சங்கரன் கோயில் ஆலயத்திற்குள் சென்ற அவர், வெளியே வரவே இல்லை. அவரது மறைவு இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

இந்தியாவிலேயே வெள்ளையர் படைகளை எதிர்த்து முதன் முதலில் வீர வாள் உயர்த்தி வெற்றி வாகை சூடிய புகழ் மன்னர்தான் பூலித்தேவர். அதனால்தான் 1984 இல் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சங்கரன்கோவில் சுவாமி சன்னதிக்கு எதிரே நடைபெற்ற பிரம்மாண்ட திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவருக்கு டாக்டர் கலைஞர் கோட்டை எழுப்ப வேண்டும் என்று முதன் முதலில் முழங்கியவன் அடியேன்தான்.

மாமன்னர் பூலித்தேவருக்கு சிலை

அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டில் முருகன் கோயில் அமைந்த கழுகுமலைக்குத் தெற்கே சிதம்பராபுரம் கிராமச் சாலை மருங்கில் நானும், என் தம்பி வை.ரவிச்சந்திரனும் எங்கள் சொந்தச் செலவில் சிறிய மண்டபம் ஒன்றைக் கட்டி, அதனுள் இந்தியாவிலேயே பரங்கியரை எதிர்த்து முதலில் வாள் உயர்த்திய நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் அவர்களுக்கு சிலையை நிறுவினோம்.

1991 நவம்பர் 13-ம் தேதி முன்னிரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களை அழைத்துச் சென்று மன்னர் பூலித்தேவர் சிலையை திறந்து வைத்த பெருமிதமும் மகிழ்ச்சியும் என் மனதில் நிலைகொண்டுள்ளன. எனவே 311 ஆவது பிறந்த நாளில் மன்னர் பூலித்தேவரின் புகழ் திக்கெட்டும் பரவுக!” என புகழஞ்சலி சூட்டியுள்ளார்.