தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1957-ல் காணாமல் போன திருமங்கை ஆழ்வார் சிலை; 2 தலைமுறைகள் கடந்து தமிழகம் திரும்பியது எப்படி?

நம் உலோகச் சிலைகளின் தொழில் நுட்பமும், பழமையும் தான் உலகளவில் பல்வேறு நாடுகளின் அருங்காட்சியகங்களை ஈர்க்கின்றன என கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அஸ்வினி தெரிவிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் சிலை
திருமங்கை ஆழ்வார் சிலை (TN Idol Wing CID)

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 9:58 PM IST

- BY இரா.சிவக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் 1957ஆம் ஆண்டு திருடப்பட்டதாக கூறப்படும் திருமங்கை ஆழ்வாரின் வெண்கல சிலை, 69 வருடத்திற்கு பிறகு லண்டனிலிருந்து தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆக.16ஆம் தேதி தாயகம் வந்த இந்த சிலையை, ஆக.17-ல் சென்னை தலைமை செயலகத்தில் வைத்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பார்வையிட்டார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளையும் அவர் பாராட்டினார். பின்னர், உரிய நடைமுறைகளுடன் சிலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லண்டன் டூ கும்பகோணம்

அதாவது, தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் உலோக சிலைகள் மிகவும் தனித்துவமானவை. குறிப்பாக சோழர் காலத்தில் செய்யப்பட்ட சிலைகளுக்கு குறிப்பிடத்தக்க மதிப்புண்டு.‌ ஏனென்றால், தாமிரம், வெண்கலம், தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற பல உலோகங்களால் அவை உருவாக்கப்பட்டவை.

பழமை மற்றும் செய்நேர்த்தி ஆகியவை காரணமாக உலகளாவிய சந்தை வாய்ப்புகளும் அவற்றுக்கு உள்ளது. அதனாலேயே இங்கிருந்து பல்வேறு அரிய சிலைகள் படையெடுப்புகளாலோ அல்லது உள்ளூர் சிலை திருட்டு கும்பல்களாலோ வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. அப்படி கடத்தப்பட்ட சிலைகளில் ஒன்றுதான் திருமங்கை ஆழ்வாரின் வெண்கல சிலை.

மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய். அருகில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் (@TNDIPR)

யார் இந்த திருமங்கை ஆழ்வார்?

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகரிக்கு அருகில் உள்ள‌ திருக்குறையலூரில் பிறந்தவர். வைணவ மரபின் 12 ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாராகக் கருதப்படுகிறார். திருமாலைப் போற்றி பாடிய அவரது பாடல்கள், வைணவ பக்தி இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றவை.

பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் உள்ளிட்ட ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1,253 பாசுரங்கள் பாடியுள்ளார். கட்டிளம் காளையாகத் திகழ்ந்த திருமங்கை ஆழ்வார் தன் இளம் வயதில் குறுநிலத் தலைவராக, சிறந்த போர் வீரராகவும் விளங்கியுள்ளார். பிறகு திருமாலின் மீது பற்று கொண்டு முழு நேர பக்தராக மாறியுள்ளார். எனவே குறிப்பிட்ட சிலை பழமையான உலோகச் சிற்பமாக மட்டுமின்றி, வைணவ சமயத்தின் ஆன்மீக கலை, இலக்கிய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

காட்டிக்கொடுத்த போட்டோ

இந்த சிலையின் மீட்பில் மிக முக்கியமான ஆதாரமாக அமைந்தது கடந்த 1957ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம். பிரெஞ்சு ஆய்வு நிறுவனங்களின் காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில், திருமங்கை ஆழ்வார் சிலை கோயிலில் இருந்தது தெளிவாகப் பதிவாகியிருந்தது.

பின்னர் வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிலையுடன் அந்த புகைப்படம் ஒப்பிடப்பட்டபோது, உடல் அமைப்பு, ஆபரணங்கள், கைகளின் நிலை உள்ளிட்ட அம்சங்கள் ஒரே சிலை என்பதை உறுதிப்படுத்த உதவின. இதுவே பல ஆண்டுகளுக்குப் பிறகு சிலையின் உண்மையான அடையாளத்தை நிரூபிக்க உதவிய முக்கிய ஆவணமாக அமைந்தது.

திருமங்கை ஆழ்வார் சிலை (ETV Bharat Tamil Nadu)

சிலை எப்போது காணாமல் போனது?

1957 - 1967ஆம் ஆண்டுக்குள் கோயிலில் இருந்த நான்கு பழமையான சிலைகள் காணாமல் போனதாக விசாரணையில் தெரியவந்தது. 'திருமங்கை ஆழ்வார், காளிங்க நர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி' ஆகிய சிலைகளுக்குப் பதிலாக கோயிலில் பிரதிகளை வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் பல ஆண்டுகளாக உண்மையான சிலைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பது தெரியாமலேயே இருந்துள்ளது.

சிலை லண்டன் சென்றது எப்படி?

திருமங்கை ஆழ்வார் சிலை சர்வதேச பழமையான கலைப்பொருட்கள் சந்தைக்கு சென்றுள்ளது. கடந்த 1967ஆம் ஆண்டு Sotheby's ஏலத்தின் மூலம், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் J.R.Belmont என்பவரின் சேகரிப்பிலிருந்து ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் இந்த சிலையை வாங்கியது. அப்போது இதன் பூர்வீகம் அருங்காட்சியகத்துக்கு தெரியவில்லை. இதனால், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சிலை ஆக்ஸ்போர்டில் உள்ள அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்தது.

திருடப்பட்ட சிலை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

அக்குறிப்பிட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சிலைத் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் ஆய்வாளர்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்கள், ஏல நிறுவனங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, 1957ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கோயில் புகைப்படத்துக்கும், ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்த திருமங்கை ஆழ்வார் சிலைக்கும் இடையே மிகத் தெளிவான ஒற்றுமை கண்டறியப்பட்டது. இதன்மூலம், லண்டனில் உள்ள சிலை வேறு ஒரு சிலை என்ற சாத்தியம் குறைந்து, அது தமிழக கோயிலில் இருந்து காணாமல் போன அதே சிலை என்பதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.

திருமங்கை ஆழ்வார் சிலை (ETV Bharat Tamil Nadu)

தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

கடந்த 2020ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையை மேற்கொண்டது. விசாரணை அதிகாரிகள் பழைய புகைப்படங்கள், கோயில் ஆவணங்கள், அருங்காட்சியகப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களைத் திரட்டி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் சமர்ப்பித்தனர். ஆதாரங்களின் வலிமையைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சிலையின் பூர்வீகம் குறித்து விசாரணை மேற்கொண்டது. அதன் பிரதிநிதிகள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆவணங்களையும் சாட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

அதன்பிறகு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. இதனால், இது வெறும் காவல்துறை மீட்பு நடவடிக்கை மட்டுமல்ல; ஆவண ஆதாரங்கள், கலை வரலாற்று ஆய்வு, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தூதரக நடவடிக்கைகள் இணைந்த ஒரு பண்பாட்டு மீட்பு நடவடிக்கை என்றுதான் கூற வேண்டும்.

உரிய ஆதாரங்களோடு நிரூபித்ததே முதல் வெற்றி

இதுகுறித்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் திருமங்கையாழ்வார் சிலையை மீட்டெடுப்பதில் பணியாற்றிய குழுவின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "குறிப்பிட்ட சிலை திருட்டு சம்பவம் நடந்தது 1957-1967 காலம் என்றாலும், Idol Wing CID 2020 பிப்ரவரி 12-ல் வழக்கை பதிவு செய்தது. கோயில் செயல் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியது.

1957-ல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வாளர்களால் செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படம் Institut Français de Pondichéry (IFP) மற்றும் École française d'Extrême-Orient (EFEO) ஆவணங்களில் இருந்தது. அதிலிருந்த திருமங்கை ஆழ்வார் சிலையின் உருவ அமைப்பு, வெளிநாட்டில் இருந்த சிலையுடன் ஒப்பிடப்பட்டது.

சிலைத் திருட்டு வழக்குகளில் ஒரு சிலை இந்தியாவை சேர்ந்தது என்பதை மட்டும் நிரூபிப்பது போதாது. அது குறிப்பிட்ட கோயிலிலிருந்து திருடப்பட்டதையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. இந்த வழக்கில் அந்த இணைப்பை உருவாக்கியதே முக்கியமான புலனாய்வு நடவடிக்கை. தமிழ்நாடு Idol Wing தயாரித்த ஆதாரங்கள் மிகவும் வலுவானது என்பதால் மீட்பு நடவடிக்கை துரிதமானது" என்றார்.

கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அஸ்வினி (ETV Bharat Tamil Nadu)

தொழில் நுட்பமும், பழமையும்

இதுதொடர்பாக கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அஸ்வினி-யை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் தொடர்பு கொண்டோம். கும்பகோணம் மகாமக திருவிழாவிற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த நிலையிலும் அஸ்வினி உற்சாகத்துடன் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

"இந்து சமய அறநிலையத்துறை மட்டுமன்றி தமிழக அரசின் பல்வேறு துறைகளும் மத்திய அரசுத் துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்பட்டதின் வெற்றிதான் திருமங்கை ஆழ்வாரின் சிலை மீட்பு.‌ தமிழர்களின் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்பவை தான் நம் உலோகச் சிலைகள். இதன் தொழில் நுட்பமும், பழமையும் தான் உலக அளவில் பல்வேறு நாடுகளை அதன் அருங்காட்சியகங்களை ஈர்க்கின்றன.

இது ஆரம்பம் மட்டுமே

இதேபோன்ற மாதிரி சிலை ஒன்றை உருவாக்கி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு தான், இந்த சிலையை நாம் திரும்ப மீட்டு இருக்கிறோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக நான் பார்க்கிறேன். காரணம் இதுபோன்று வெளிநாடுகளில் உள்ள நமது எஞ்சிய கலை பொக்கிஷங்களை அடுத்தடுத்து கொண்டு வருவதற்கான முயற்சியின் தொடக்கம்தான்.

கும்பகோணம் சௌந்தரராஜ பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சிலையை வரவேற்பதற்காக திரண்ட காட்சியை என்னால் மறக்கவே முடியாது. ஊர் திருவிழாவிற்கு சாமியை அழைத்து வருவது போன்று அந்த இரவு நேரத்திலும் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்" என்றார் பெருமிதத்துடன்.

பலத்த பாதுகாப்பு

மீட்கப்பட்டு சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த சிலைக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என கேட்டபோது அஸ்வினி, "இதுபோன்ற கலை பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு கோவிலிலும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகள் உண்டு.

அதுமட்டுமன்றி கண்காணிப்பு கேமராக்களும் அங்கு தற்போது வைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும், பொதுமக்களும் தடையின்றி திருமங்கை ஆழ்வார் சிலையை தரிசிக்கவும் முடியும்" என்றார்.

இன்னும் மூன்று சிலைகளின் கதை?

தமிழ்நாட்டின் கோயில்களில் இருந்து பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலைகள் பல்வேறு காலகட்டங்களில் திருடப்பட்டு, சர்வதேச கலைப்பொருட்கள் சந்தை வழியாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளன. திருமங்கை ஆழ்வார் சிலை மீட்கப்பட்ட விதம், அவற்றை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான முக்கியமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இதே கோயிலில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மற்ற மூன்று சிலைகளும் வெளிநாடுகளில் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள Asian Art Museum-லும், விஷ்ணு சிலை டெக்சாஸில் உள்ள Kimbell Art Museum-லும், ஸ்ரீதேவி சிலை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஏல நிறுவனத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே கோயிலிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மற்ற கலைப்பொருட்களையும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட வேண்டும்.

69 ஆண்டுகள் கடந்தும் அழியாத ஒரு தடயம்

ஒரு கலைப்பொருள் காணாமல் போனாலும், அதன் வரலாற்றுத் தடயங்கள் அழிந்துவிடுவதில்லை. ஒரு பழைய புகைப்படம், ஒரு அருங்காட்சியகப் பதிவு, ஒரு ஏல ஆவணம் ஆகியவை பல தசாப்தங்களுக்குப் பிறகும் உண்மையை வெளிக்கொண்டு வர முடியும். திருமங்கை ஆழ்வார் சிலை நமக்கு சொல்லும் மிகப்பெரிய பாடம் இதுதான். இது ஒரு வெண்கலச் சிலையின் ‘வீடு திரும்புதல்’ மட்டுமல்ல. தமிழகத்தின் வரலாறு, ஆன்மிகம், கலை மற்றும் பண்பாட்டு அடையாளம் மீண்டும் தனது உரிமையான இடத்தை பெறும் தருணம்.

இதையும் படிங்க: