தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன்.. தொழிலதிபர் செய்த செயலால் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 9:34 AM IST

Chennai Airport: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்ல இருந்த விமானத்தில் அமெரிக்க தொழிலதிபர் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல்
சென்னை விமான நிலையம்

சென்னை:சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டு தொழிலதிபரிடமிருந்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சேட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அவரின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்' நேற்று(ஜன.25) காலை 10:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருப்பதால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு பயணியின் உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரூபன் (52) என்ற பயணி வந்துள்ளார். அப்பொழுது அவரது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள் அவரது கைப்பைக்குள் இருந்து சாட்டிலைட் போன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

நமது நாட்டில் சேட்டிலைட் போன் உபயோகிக்க காப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் அமெரிக்க பயணி பயணம் செய்ய முயன்றது பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் ஆண்ட்ரூ ரூபன் என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அவரின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆண்ட்ரூ ரூபன் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் தொழில் காரணாமாக பிசினஸ் விசாவில் புதன்கிழமை அதிகாலை துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தேன். அப்பொழுதும் இந்த சேட்டிலைட் போனை தான் எனது கைப்பையில் வைத்திருந்தேன். ஆனால், சுங்க அதிகாரிகள் பரிசோதித்த நிலையிலும் சாட்டிலைட் போனை கண்டு கொள்ளவில்லை. மேலும், எங்கள் நாட்டில் சேட்டிலைட் போன் உபயோகிக்க தடை ஏதும் இல்லை. தற்போது சிங்கப்பூர் செல்லும் நிலையில் ஏன் போனை பறிமுதல் செய்கிறீர்கள்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தங்கள் நாட்டு சட்ட விதிகளின்படி, சாட்டிலைட் போனை பயணி ஒருவர் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, அமெரிக்க தொழில் அதிபர் ஆண்ட்ரூ ரூபனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இது குறித்த தகவலை சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டு தொழிலதிபர் ஒருவர், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சேட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்று, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: "இருவர் கைது - சட்டரீதியாக நடவடிக்கை" - அமைச்சர் சாமிநாதன் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details