தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வ.உ.சி துறைமுகத்தை 'இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் கப்பல் மாற்று மையமாக்குவோம்' - மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்

Union Minister Sarbananda Sonowal: தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் கப்பல் மாற்று மையமாக மாற்றப்படும் என மத்திய துறைமுகங்கள் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.

Union Minister Shri Sarbananda Sonowal
மத்திய அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 7:40 AM IST

சென்னை: மீனம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் துறைமுக மேம்பாடுகள் பற்றி மத்திய துறைமுகங்கள் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் நேற்று (பிப்.28) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, "பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழ்நாடு மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்திலிருந்தே கடல்வழி வணிக வரலாற்றைக் கொண்டுள்ளது.

எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். சாகர்மாலா, பாரத்மாலா, பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் போன்ற முன் முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் 45க்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு ரூ.16,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரூ.93,671 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.35,247 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 167 மில்லியன் டன்னிலிருந்து 338 மில்லியன் டன்னாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கப்பலின் செயல்பாட்டு நேரம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் குந்துகால், பூம்புகார், சின்னமுட்டம், மூக்கையூர் ஆகிய 4 இடங்களில் மீன்பிடி துறைமுகத் திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் துறையில் புதுமைகளுக்காகச் சென்னை ஐஐடியில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 36 முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், இது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு படியாகும்.

அதுமட்டுமன்றி ரூ.10,324 கோடி மதிப்பிலான 30 திட்டங்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இவற்றில் ரூ.7,587 கோடி மதிப்பிலான 6 திட்டங்கள் தமிழ்நாட்டிலுள்ள இரண்டு துறைமுகங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

முன்னதாக, பிரதமர் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் கப்பல் மாற்று மையமாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். அது இன்று நிறைவேறப் போகிறது. பிரதமர் மோடியின் உத்தரவாதம் நிறைவேற்றப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7,056 கோடி செலவில் 'வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத் திட்டம்' உருவாக்கப்படும். இதன் மூலம் நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒரு பெரிய கப்பல் போக்குவரத்து மையமாகத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலைநிறுத்தப்படும். இந்த திட்டம் துறைமுகத்தின் கொள்கலன் திறனைப் பல மடங்கு அதிகரிக்கும். மேலும், மாநிலத்தின் பொருளாதாரத்தைக் கணிசமாக உயர்த்தும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:"வாகனத் துறையில் உலக அரங்கில் தமிழ்நாடு தனது திறமையை நிரூபித்துள்ளது" - பிரதமர் மோடி பெருமிதம்..

ABOUT THE AUTHOR

...view details