தமிழ்நாடு

tamil nadu

6 ஆண்டுகளுக்குப் பிறகு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் திறப்பு.. மக்கள் மகிழ்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 2:03 PM IST

Tirunelveli Junction: திருநெல்வேலியின் அடையாளமாக கருதப்பட்ட திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம்

திருநெல்வேலி:திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா, இன்று (பிப்.18) பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை சீரமைக்கப்படுவதற்காக இடிக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலையம் கட்டுமானப் பணியில், பூமிக்கு அடியில் கிடைத்த ஆற்று மணல் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் பல்வேறு காரணங்களால் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு பேருந்து நிலையப் பணிகள் தொடங்கியது. ஆறு வருடங்களுக்குப் பிறகு, திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சுமார் ரூ.80 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட நான்கு மாடி கட்டடங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் இன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலைய திறப்பு விழாவில், ரூ.135.18 கோடி மதிப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட டார்லிங் நகரில் உள்விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாகம் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் ரூ.12.5 கோடி மதிப்பில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகைகுளம் மற்றும் 12 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதேபோல், ரூ.423.13 கோடி மதிப்பில் களக்காடு நகராட்சி மற்றும் ஏழு பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “கருணாநிதிக்கு பிடித்த ஊர் திருநெல்வேலி.

இன்று, திருநெல்வேலி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஒரே சீராக வளர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. திருநெல்வேலியில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததால், 3 நாட்களில் திருநெல்வேலியை மீட்க முயன்றது.

தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், மாநிலத்தை இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக மாற்றி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசிற்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக கொடுத்துள்ளது. ஆனால், அவற்றில் ரூ.1.50 லட்சம் கோடியை மட்டும்தான் மத்திய அரசு நமக்கு திரும்பக் கொடுத்துள்ளது.

நாம் கொடுக்கும் ஒரு ரூபாய் வரிக்கு 28 பைசா தருகிறார்கள். வெள்ள நிவாரணமாக இதுவரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கினார். முதலமைச்சர் தொலைநோக்குச் சிந்தனையோடு செயல்படுகிறார். சென்னையில் இருப்பது போன்று நெல்லையிலும், நெல்லையில் இருப்பது போன்று தென்காசியிலும் இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட அரசின் நோக்கம்” என்று கூறினார்.

புதிய பேருந்து நிலையத் துவக்கம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், “புதிய பேருந்து நிலையத்தில், குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா, கடைகள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இதனால் மக்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:திமுக பிரச்சார மேடையில் ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details