தமிழ்நாடு

tamil nadu

"ஆளுநர் ஆர்.என்.ரவி மாயி படத்தில் வரும் மின்னல் போன்றவர்" - பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Stalin in Viluppuram

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 4:36 PM IST

Udhayanithi Stalin: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு ஆதரவாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விழுப்புரம்
Villupuram

விழுப்புரம்:வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய ரவிக்குமாரை கடந்த முறை கிட்டத்தட்ட 1 லட்சத்து 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். கடந்த முறை நமது எதிரிகள் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள். இம்முறை அனைவரும் தனித்தனி அணியாக வந்துள்ளனர்.

அதனால் இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். அப்படி செய்தீர்கள் என்றால், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். அதாவது, மாதம் இரு முறை விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு வந்து, உங்களது குறைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துச் செல்வேன்.

"நான் சொல்வதைத்தான் செய்வேன்" "செய்வதைத்தான் சொல்வேன்" ஏனென்றால் நான் கருணாநிதியின் பேரன். திமுகவில் இருக்கும் அனைத்து தொண்டர்களும், இளைஞர்களும் அவரின் பேரன் தான். பெரியாரின் பேரன் தான். அண்ணாவின் பேரன் தான்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39, புதுச்சேரியைச் சேர்த்து 40 தொகுதிகளில் நாம் எவ்வாறு வெற்றி வாகை சூடினோமோ, அதே போன்று வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 நமதே என வென்று காட்ட வேண்டும்" எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணா சொன்னார். நமது ஆளுநர் ஆர்.என். ரவி இல்லை. அவர் ஆர்எஸ்எஸ் ரவி. ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் வெளிவந்த வின்னர் படத்தில் வரும் கதாபாத்திரத்தை போன்று, அவர் ஒரு கைப்பிள்ளை மற்றும் மாயி படத்தில் வரும் மின்னல் போன்றவர். சட்டசபைக்கு எப்பொழுது வருகிறார் எப்போது செல்கிறார் என்றே தெரியாது.

சட்டசபையில் அவர் வருவது மட்டும் எங்களுக்கு தெரியும். அவர் சொல்வதை நாங்கள் எப்படி உணர்வோம் என்றால், அவர் சென்ற அடுத்த நிமிடம் அதிமுககாரர்கள் அனைவரும் அவருடனே பின்னாடியே செல்வர். அதை வைத்து தான் அவர் சட்டசபையை விட்டு வெளியே செல்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியும்.

ஆளுநர் என்பவர் ஒரு போஸ்ட்மேன். முதல்வர் சொல்வதை பிரதமரிடமும், பிரதமர் சொல்வதை முதல்வரிடமும் சொல்ல வேண்டும். அதுதான் ஆளுநரின் வேலை" என பேசினார்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல்: தென்காசி வேட்பாளர்களுக்கு ரயில் பயணிகள் சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை! - Tenkasi Lok Sabha

ABOUT THE AUTHOR

...view details