சென்னை: சென்னை கே.கே.நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், "திருமணத்திற்காக மேட்ரிமோனியில் இணையதளம் மூலம் பதிவு செய்திருந்தேன். இதை அடுத்து வெளிநாட்டில் இருந்து ஒருவர் தான் அலெக்சாண்டர் சாண்சீவ் என அறிமுகம் செய்து கொண்டு வாட்ஸாப்பில் பேசத் தொடங்கினார்.
மேலும், அந்த நபர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததால் நானும் தொடர்ந்து அவரிடம் பேசி வந்தேன். இந்த நிலையில், அவர் எனக்கு மதிப்புமிக்க பரிசு ஒன்றை அனுப்பி வைத்தார். இதனை அடுத்து, டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பேசுவதாகக் கூறி செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் உங்கள் பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது அதற்கு வரி கட்டினால் மட்டுமே உங்களிடம் அந்த பொருள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
இதை உண்மை என நம்பிய நான், பல்வேறு வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடியே 87 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தேன். இதை அடுத்து, என்னிடம் பேசி வந்த நபரையும் சுங்கத்துறை அதிகாரி என்று பேசியவரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளேன். ஆகவே, எனது பணத்தை மீட்டு மோசடி செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண் மருத்துவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கின் விவரங்களைச் சேகரித்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.