தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகம், அன்னந்திருச்சேறை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் இவரது மனைவி குறித்து தவறாக கிராமத்தில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டிருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் மற்றும் கணேசன் ஆகிய மூன்று இளைஞர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் அன்னந்திருச்சேறை கிராமத்திற்கு வந்தபோது, சாலையில் விழுந்து கிடந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பின்னர், உடனடியாக கண்ணனை மீட்ட அப்பகுதி மக்கள், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்தது விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கண்ணனின் உடல் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள அமரர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவரது மனைவி, தனது கணவர் கண்ணன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் தாக்கியதால்தான் தனது கணவர் உயிரிழந்துள்ளார் என நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் அளித்த புகார் அடிப்படையில், போலீசார் இவ்வழக்கினை தற்சமயம் சந்தேக மரணமாக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கண்ணனின் உடற்கூராய்வு மற்றும் போலீசாரின் விசாரணையில், இது இயற்கை மரணம் அல்ல என தெரிய வந்தால் இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் என கூறப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கண்ணன் மரணம் அன்னந்திருச்சேறை கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஜாஃபர் சாதிக் விவகாரம்: ஈபிஎஸ், அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!