தமிழ்நாடு

tamil nadu

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் தாயகம் திரும்பினர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 3:23 PM IST

Rameswaram fishermen: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களில் 20பேரை விடுதலை செய்த நிலையில், மீதமுள்ள மூன்று மீனவர்களையும் மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

rameswaram fishermen
தமிழக மீனவர்கள் 20 பேர் தாயகம் திரும்பின

தமிழக மீனவர்கள் 20 பேர் தாயகம் திரும்பின

சென்னை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி 2 படகுகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் சென்ற 23 மீனவர்களை கைது செய்தனர். பின்னர், அவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் ஜான் பிரிட்டோ, ராபர்ட் பிரன்சிஸ் ஆகிய இரண்டு பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கச்சத்தீவு விழாவையும் புறக்கணித்தனர். இதனையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பின்னர், இலங்கை அரசு 20 மீனவர்களை விடுதலை செய்து, அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் 20 பேருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின், இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர்.

மீனவர்களை தமிழக பாஜக மீனவர் அணி தலைவர் முனுசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் நாகராஜன், ஜேசுராஜ் ஆகியோர் 20 மீனவர்களை அரசு செலவில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

மீனவர்கள் கோரிக்கை:இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் அந்தோணி கிருஷ்ணன் கூறுகையில்," கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 23 பேரில் ஒருவருக்கு ஒரு ஆண்டு தண்டனையும், படகு ஓட்டிய 2 பேருக்கு 6 மாத சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

மீன் பிடிக்கச் சென்ற எங்களுக்கு இந்த தண்டனையா? 10 நாட்கள் கூட அங்கு இருக்க முடியவில்லை. சாப்பாடு சரியில்லை, 3 பேரையும் விடுதலை செய்து தந்தால் போதும். கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதால் கோடி கோடியாக சம்பாதிக்கப் போவதில்லை. ரூ.500 முதல் ரூ.600 கிடைக்கும் என நம்பிதான் வேலைக்குப் போகிறோம்.

இப்படி இருக்கையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை யார் பார்ப்பார்கள், அவர்களின் வாழ்வாதரம் என்ன ஆவது? 3 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு படகை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.30 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை ஆகும். இலங்கையில் ஆயிரக்கணக்கான படகுகள் உள்ளன. இந்த படகுக்கான பணத்தை சரிகட்ட குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகும். நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறது. நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட படகுகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என அவர் கூறினார்.

இதையும் படிங்க:வீட்டில் தந்தை சடலம்.. தந்தையின் கனவை நனவாக்க கண்ணீருடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

ABOUT THE AUTHOR

...view details