தமிழ்நாடு

tamil nadu

"கடன் தவணையைக் கட்டிவிட்டு மனைவியை அழைத்துச் செல்" - தனியார் வங்கி ஊழியர் அடாவடி! - private bank took away wife

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 8:50 PM IST

Updated : May 1, 2024, 9:43 PM IST

Private Bank Took Away Wife: சேலம் அருகே வாழப்பாடியில் தனியார் வங்கி ஊழியர்கள் கூலித்தொழிலாளி ஒருவரிடம், வாங்கிய கடன் தவணைத் தொகை பணத்தை கட்டிவிட்டு மனைவியை கூட்டிச் செல்லுங்கள் என்று கூறி, மனைவியை தனியார் வங்கி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Private Bank Took Away Wife
Private Bank Took Away Wife

Private Bank Took Away Wife

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (27). கட்டட தொழிலாளியான இவர், கௌரி சங்கரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடும்ப கஷ்டம் காரணமாக, வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.35 ஆயிரம் பணம் கடனாகப் பெற்று உள்ளார்.

இதனை வாரம் ரூ.770 வீதம், 52 வாரத் தவணைகளாக பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வகையில், கடன் பெற்று இருந்தாக கூறப்படுகிறது. இன்னும் 10 வாரத் தவணை பாக்கி உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று (ஏப்.30) சுபா என்கிற தனியார் வங்கி பெண் ஊழியர், பிரசாந்த்தினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தவணை வசூல் செய்ய நேரில் சென்ற தனியார் வங்கி பெண் ஊழியர் சுபா, பிரசாந்த் வீட்டில் மதியம் முதல் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் வீட்டிற்கு வராததால், வீட்டிலிருந்த கௌரி சங்கரியைத் தன்னுடன் வருமாறும், தவணைத் தொகையைச் செலுத்தி விட்டு உனது கணவர் உன்னை அழைத்துச் செல்லட்டும் என்று கூறி, கௌரி சங்கரியை தனியார் வங்கி அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து கௌரி சங்கரி செல்போன் மூலம் கணவரைத் தொடர்பு கொண்டு, தவணைத் தொகையைக் கட்டிவிட்டு சீக்கிரம் என்னை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறியதால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த், வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்திடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் உத்தரவின் பேரில், வாழப்பாடி போலீசார் வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில், கடன் தவணைத் தொகை பணத்தைக் கட்டிவிட்டு மனைவியை கூட்டிச் செல்லுங்கள் என்று சுபா கூறியது எனக்குத் தெரியாது என்று வங்கி மேலாளர் கூறியதாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு 7.30 மணியளவில், பிரசாந்த் போலீசார் முன்னிலையில் ரூ.770 பணத்தைச் செலுத்தி மனைவி கௌரி சங்கரியை மீட்டுச் சென்றார். இரவு நேரம் என்பதால், இரண்டு தரப்பினரையும் விசாரிக்க காலையில் வரச்சொல்லிவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர்.

மாலை 6 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களைப் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இரவு 07.30 மணிவரை பெண்ணை வங்கியில் அமர வைத்து கணவரிடம் பணத்தை வசூல் செய்த தனியார் வங்கி மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரசாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா.. பாராட்டிய ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ! - Aishwarya Rajinikanth New House

Last Updated : May 1, 2024, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details