தமிழ்நாடு

tamil nadu

பள்ளிபாளையத்தில் வறுமையைப் போக்க சிறுநீரகம் விற்பதாக புகார்.. போலீசார் அதிரடி நடவடிக்கை! - Pallipalayam kidney selling

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 4:50 PM IST

Pallipalayam kidney selling: கடன் தொல்லை காரணமாக பள்ளிபாளையத்தில் மீண்டும் விசைத்தறி தொழிலாளர்கள் சிறுநீரகம் விற்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pallipalayam kidney selling
பள்ளிபாளையம் காவல் நிலையம் புகைப்படம் (credits - Etv Bharat Tamilnadu)

புகார்தாரர் பாலசுப்பிரமணியம் பேட்டி (Credit - ETV Bharat Tamilnadu)

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் மீண்டும் விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையைப் பயன்படுத்தி, சிறுநீரகம் விற்க மூளைச்சலவை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலம்பாளையம் பேரூராட்சி மன்ற 6வது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

புகார் மனுவின் அடிப்படையில், திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையைப் பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை செய்யும் சிறுநீரக இடைத்தரகர்கள் என சந்தேகப்படும் சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து புகார் மனு அளித்த பாலசுப்பிரமணியம் கூறுகையில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. மேலும், விசைத்தறி தொழிலை மட்டுமே நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் சமீப காலமாக கடன், வறுமை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் சிறுநீரகம் விற்பதாக தெரியவந்தது. இதனால் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இது சம்பந்தப்பட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, சிறுநீரகம் மற்றும் கருமுட்டை விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு சிலர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் இப்பகுதியில் சிறுநீரகம் விற்பனை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளிபாளையத்தில் தொடரும் சிறுநீரக விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:வாட்டி வதைக்கும் வெப்பம் எப்போது தணியும்? - பாலச்சந்திரன் கூறிய குட் நியூஸ்! - Tamil Nadu Weather Report

ABOUT THE AUTHOR

...view details