தூத்துக்குடி: கோவில்பட்டி ராஜூ நகர் 3வது தெருவைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன் மாரிசெல்வம். இவர் கோவில்பட்டியில் வழக்கறிஞராக உள்ளார். ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாம்பு கார்த்திக் என்பவர், சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் நகரைச் சேர்ந்த லட்சுமணன் என்ற சிறுவனை, வீடுகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கித் தருவதற்கு கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு லட்சுமணன் மறுக்கவே, அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிசெல்வம், பாம்பு கார்த்தியை தொடர்பு கொண்டு, எதற்காக சிறுவன் லட்சுமணனை அடித்தாய் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில், பாம்பு கார்த்திக், மாரி செல்வத்தை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, அதிகாலையில் பாம்பு கார்த்திக் தலைமையில் 4 கார்கள், இரண்டு பைக்குகளில் வந்த 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், வழக்கறிஞர் மாரி செல்வத்தின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.