திருநெல்வேலி: தாமிரபரணி ஆறு, இருட்டுக்கடை அல்வா, பத்தமடை பாய் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நெல்லை மாவட்டத்தின் பிரதான தலைநகர் பேருந்து நிலையம், நெல்லை சந்திப்பு பகுதியில் பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்தது. பின்னர், இட நெருக்கடி காரணமாக பாளையங்கோட்டை அருகே வேய்ந்தான் குளத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சந்திப்பில் இயங்கி வந்த பேருந்து நிலையம், நெல்லையின் பழைய பேருந்து நிலையமாக 15 ஆண்டுகளாக செயல்பட்டது. நெல்லை மக்கள் இப்பேருந்து நிலையத்தை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் என்று அழைப்பர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு நெல்லை பழைய பேருந்து நிலையம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர், அங்கு மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கியது.
ஆனால், பேருந்து நிலையம் கட்டுமானப் பணியின்போது, பூமிக்கு அடியில் கிடைத்த ஆற்று மணல் சட்ட விரோதமாக விற்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பெரும் சர்ச்சையானது. எனவே, நீதிமன்ற வழக்கு மற்றும் பல்வேறு காரணங்களால் நெல்லை பழைய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி தள்ளிப்போனது. இதனால், சந்திப்பு பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
6 ஆண்டு கால துயரத்திற்கு விடிவு காலம்: குறிப்பாக, பழைய பேருந்து நிலையத்தில் இருந்துதான் டவுன், பேட்டை, சுத்தமல்லி, சீவலப்பேரி, தச்சநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மேலும், வணிகம் மற்றும் கல்வி ரீதியாக சந்திப்பு டவுன் பகுதிகளுக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இங்கு வந்து செல்வர். அதேபோல், நெல்லையிலிருந்து ஆலங்குளம் வழியாக தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் சந்திப்பு பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்துதான் செல்லும்.
எனவே, கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து நிலையம் செயல்படாததால், பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்ததுள்ளது.