தமிழ்நாடு

tamil nadu

மறைந்த தலைவர்கள் பற்றி விமர்சனம் செய்வதை ஆ.ராசா தவிர்த்திருக்கலாம் - எம்.பி திருநாவுகரசர் கருத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 5:55 PM IST

M.P Thirunavukkarasar: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தபடவில்லை. காங்கிரஸ் எம்.பிக்கள் இருக்கும் தொகுதிகளை திமுக கேட்பது என்பதும், எங்களுக்கு சீட்டு தரக்கூடாது என்று கூறுவதும் கூட்டணிக்குள் விரிசல் கிடையாது என்று திருச்சி எம்.பி திருநாவுகரசர் தெரிவித்துள்ளார்.

எம்.பி திருநாவுகரசர் பேட்டி
எம்.பி திருநாவுகரசர் பேட்டி

ஆ.ராசாவுக்கு திருநாவுக்கரசர் அறிவுரை

புதுக்கோட்டை:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை வந்திருந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தேர்தலுக்காக சோதனை:அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி பல ஆண்டு காலமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகளின் படத்தை வைத்து தான் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். புலிகளுக்கு இன்னும் ஆதரவு உள்ளது என்பதை தான் இது காட்டுகிறது. அப்போதெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட்டு, தற்போது கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனை நடத்துவது என்பது சரிதானா?, தேர்தலுக்காக இது நடந்துள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.

கூட்டணிக்குள் விரிசல் கிடையாது: எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் யார் யார் வந்துள்ளனர். என்ன நிலைப்பாடு என்பதை தெரிவித்து விட்டு எங்கள் கூட்டணி குறித்து பேசட்டும். தமிழகத்திற்கு ஜே.பி நட்டா வருதால் எந்த தாக்கமும் ஏற்பட்டு விடாது. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் முதல் கட்ட பேச்சு வார்தைக்கான சந்திப்பை நடத்தியுள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தபடவில்லை. காங்கிரஸ் எம்.பிக்கள் இருக்கும் தொகுதிகளை திமுக கேட்பது என்பதும் எங்களுக்கு சீட்டு தரக்கூடாது என்று கூறுவதும் கூட்டணிக்குள் விரிசல் கிடையாது. அந்த தொகுதியில் அவர்கள் நிற்க வேண்டும் என்ற கருத்தை தான் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

வாக்குக்காக விருது:பாரத ரத்னா விருது அளித்துள்ளது என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பாரத ரத்னா விருது கொடுக்கும் இப்போதைய நேரம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. வாக்குக்காக விருது கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாரத ரத்னா விருது கொடுத்ததில் தவறில்லை. ஆனால் விருது கொடுக்கப்பட்ட நேரம் தான் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அதே வேளையில் விருது பெறும் தலைவர்களை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. பல்வேறு கருத்துக்கணிப்புகள் வருகிறது.

அண்ணாமலைக்கு அரசியல் புரிதல் இல்லை: பிரசாந்த் கிஷோர் எடுத்துள்ள கருத்துக் கணிப்புக்கள் வேறு மாதிரி உள்ளது. கணக்கெடுப்பிற்கு என ஒரு விதிமுறை உள்ளது. அவற்றை எல்லாம் முறையாக யாரும் கடைப்பிடிப்பது இல்லை. ஆனால் மக்கள் தான் எஜமானர்கள். இறுதியில் தான் முடிவு தெரியும். பாஜக தலைவர் அண்ணாமலையால் தோழமை கட்சிகளை கூட தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அவரால் தான் கூட்டணியை விட்டு போவதாக அவரது கூட்டணியில் இருந்த தலைவர்களே தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் கட்சி தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் அரசியல் கட்சி தலைவர்களும் அமைச்சர்களும் அவருக்கு பதில் அளிக்கின்றனர். 60 வருட அரசியல் பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு அண்ணாமலைக்கு அரசியல் குறித்த புரிதல் இல்லை என நினைக்கிறேன்.

எம்.பி பணியாற்றியது திருப்தியில்லை:காங்கிரஸ் கட்சித் தலைமையை விமர்சனம் செய்வதற்காக, பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து பேசியிருக்க வாய்ப்பு இல்லை. அதற்காக அவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பபட்டதாக தெரியவில்லை. 5 ஆண்டுகள திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே எம்.பி நிதி ஒதுக்கப்பட்டது. எனது அரசியல் அனுபவத்தில் இந்த 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியது திருப்தி இல்லாமல் உள்ளது.

நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டு காலம் ஆகிறது. இதுவரை 13 தேர்தலில் சந்தித்து மாநில அமைச்சர் மத்திய அமைச்சர் மட்டுமல்லாது, எம்.பி ஆகவும் இருந்து உள்ளேன். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்.பி ஆக இருந்து பணி நிறைவாக செய்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு கிடையாது.

விமர்சனம் செய்வதை தவிர்த்திருக்கலாம்:மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்கள் செய்வதற்கு எம்.பிக்களுக்கு போதிய நிதி வழங்கவில்லை. மக்கள் பிரச்சினைகளை எம்.பிக்கள் கூறினால், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இது போன்ற காரணங்களால் திருப்தி இல்லாத சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்புகிறேன். ஆனால் அதை நானே சொல்ல முடியாது. எங்கள் காங்கிரஸ் தலைமை மற்றும் திமுக கூட்டணி முடிவு எடுக்க வேண்டும்.

மறைந்த தலைவர்கள் குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்வதை ஆ.ராசா தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. நாடாளுமன்றத்தில் கடைசி கூட்டத் தொடரின் போது பிரதமர் மோடி ஆணவத்தோடு பேசியது மட்டுமல்லாமல், காங்கிரசை சபிக்கும் விதமாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது வேதனைக்குரியது” என்றார்.

இதையும் படிங்க:விருதுகளை வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கே மத்திய அரசு வழங்க வேண்டும் - கார்த்திக் சிதம்பரம் எம்பி

ABOUT THE AUTHOR

...view details